மீட்டர் வட்டி போல எகிறும் கட்டணம்!

ஆம்னி பஸ்களுக்குப் போட்டியாக கல்லா கட்டும் ரயில்வே

வம்பரில் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. முன்பெல்லாம், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த ரயில்களில் வழக்கமான கட்டணங்களே வசூலிக்கப்படும். இப்போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தி வசூலிக்கிறார்கள்.

சதாப்தி போன்ற ரயில்களில் மட்டுமின்றி, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும்கூட, சாமானியர்களால் நெருங்க முடியாத அளவுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ‘பல ரயில்களின் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, விமானக் கட்டணம் மலிவானதாக இருக்கிறது’ என மத்திய தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி) அறிக்கையில்கூட குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஃப்ளெக்சி ஃபேர் சிஸ்டம்’ (Flexi Fare System) என்ற பெயரால் ‘ரன் வட்டி’, ‘மீட்டர் வட்டி’ போல பெரும் கொள்ளை நடக்கிறது. ராஜதானி, துரந்தோ, சதாப்தி என்ற பெயர்களில் இயக்கப்படும் ரயில்களில், மொத்த படுக்கை அல்லது இருக்கைகளில் 10 சதவிகித முன்பதிவு முடிகிற ஒவ்வொரு முறையும், கட்டணத்தில் 10 சதவிகிதம் உயர்ந்துகொண்டேபோகும். இதற்கு பெயர்தான், ‘ஃப்ளெக்சி ஃபேர் சிஸ்டம்’. இதைத் தமிழில், ‘பன்முகக் கட்டண முறை’ என்கிறார்கள்.

‘சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்’, ‘சுவிதா ரயில்’ என்ற பெயர்களில் தெற்கு ரயில்வே இயக்கும் ரயில்களில், விமானக் கட்டணத்துக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண கட்டணங்களைக் கொண்ட சிறப்பு ரயில்களின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்களுக்கு இணையாக, பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயும் இப்படி கல்லா கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பண்டிகை நேரங்களில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லவும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரவும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்கள் மற்றும் சுவிதா ரயில்களை மட்டும்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இவற்றில் சாமானியர்களுக்கு இடம் கிடையாது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick