RTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்?

‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்திருக்கிறார். ‘‘அரசு சார்பில் செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இது’’ என பெருமித அறிமுகம் கொடுத்திருக்கிறார் பிரதமர். இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் ஏற்கெனவே ‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தைத் தேசிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்க தமிழக அரசு இப்போது ஒப்புதல் அளித்துவிட்டது. எனவே, இப்போது இரண்டு திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டன. இதன்படி, தமிழகத்தின் 77 லட்சம் குடும்பங்களில் உள்ள சுமார் 2 கோடியே 85 லட்சம் பேர் இனி ஓராண்டுக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெறலாம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்காக அதிகபட்சமாக 25 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் காப்பீடு இல்லாதவர்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலை நோக்கி இந்தியாவும் தள்ளப்படும் சூழலில், பிரதமரின் இந்தத் திட்டம் வந்துள்ளது. இது, இந்தியா முழுக்க எப்படி செயல்பட உள்ளது என்பதை இனிதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்ன நிலையில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைக் கேட்டுப் பெற்றோம். மக்களைவிட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மருத்துவமனை நடத்துபவர்களும் இதில் அதிகப் பலன் அடைந்துள்ளனர் என்பது புரிந்தது. கண்டதுக்கெல்லாம் சண்டைபோட்டுக் கொள்ளும் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும், கட்சிபேதம் பார்க்காமல் கைகோக்கும் சங்கதிகளில், டாஸ்மாக்குக்கு அடுத்து இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் சொல்லலாம்!

அரசு சார்பில் பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முதன்முதலில் 2003-ல் கர்நாடகத்திலும், பிறகு ஆந்திரா மற்றும் கேரளத்திலும் வந்தன. தமிழகத்தில் 2009 ஜூலை 23 அன்று ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. தனியார் நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில், ‘முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என இதற்குப் பெயர் மாற்றப்பட்டு, பொதுத்துறையைச் சேர்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick