ராகுல் தவறவிட்ட கூட்டணி எக்ஸ்பிரஸ்! | Rahul Gandhi missed to form Election alliance - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

ராகுல் தவறவிட்ட கூட்டணி எக்ஸ்பிரஸ்!

ஓவியம்: அரஸ்

மீபத்தில் அறிமுகமாகியிருக்கும் சென்னை - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய ஒரு தகவல், சமூக வலைதளங்களில் வைரல். சினிமாக்களில் காட்டப்படும் ரயில்கள்போல இதில், புறப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும்போது ரன்னிங்கில் வந்து ஏற முடியாது. தானியங்கி கதவுகள் என்பதால், ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். தாமதமாக வருவோர், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை ‘தேமே’ என்று பரிதாபமாக வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். 2019 தேர்தலுக்கு உருவாகி இருக்கவேண்டிய கூட்டணி எக்ஸ்பிரஸை இப்படித்தான் தவறவிட்டு விழித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

அதேசமயம், நாடு முழுவதும் நிலைமை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்துகொண்டு முதலிலேயே சுதாரித்துக்கொண்டது பி.ஜே.பி. அதனால், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முந்திக் கொண்டு முடித்தது. மகாராஷ்டிரத்தில் பல மாதங்களாக முரண்டுபிடித்துச் சண்டை போட்டுக்கொண்டிருந்த சிவசேனாவைக்கூட சமாதானப்படுத்தி, கூட்டணிக்குள் இழுத்து வந்தார்கள். பீகாரில், கூட்டணி அமைவதற்காக, தங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் தொகுதியைக்கூட விட்டுக்கொடுத்தார்கள். சமீபத்தில், சட்டமன்றத் தேர்தலில், மோசமான தோல்வியைச் சந்தித்த சத்தீஸ்கரில், தற்போதைய எம்.பி-க்கள் 10 பேருக்குமே சீட் கொடுக்க மறுத்து, புதுமுகங்களை அறிவித்தார்கள். கிட்டத்தட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சின்னச்சின்னக் கட்சிகளைத் தவிர மற்ற அனைவரையும் கூட்டணிக்குள் இழுத்துவந்துவிட்டார்கள்.

ஆனால், இந்தப் பக்கம் காங்கிரஸ்? மகாராஷ்டிரம், தமிழகம், பீகார், கர்நாடகம் தவிர வேறு எங்குமே வலுவானக் கூட்டணியை உருவாக்க முடியவில்லை. உருவாகும் வாய்ப்பிருந்த இடங்களையும் அலட்சியம் செய்தார்கள். உருவாகியிருக்கும் கூட்டணிகளிலும் ஏகத்துக்கும் தள்ளுமுள்ளுகள்... அதிருப்திகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.