“இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ்!” - செ.கு.தமிழரசன் பொளேர் | Se Ku Thamizharasan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

“இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ்!” - செ.கு.தமிழரசன் பொளேர்

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசனோடு கைகோத்துப் புருவம் உயர்த்தவைத்திருக்கிறார் இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். கூட்டணி ரகசியம் குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் தமிழரசனை சந்தித்தோம்.

‘‘அ.தி.மு.க கூட்டணியில் இருந்த நீங்கள், மக்கள் நீதி மய்யத்துடன் கைகோத்த ரகசியம் என்ன?’’

‘‘மதவாதக் கட்சியான பி.ஜே.பி., அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறது. மத்திய பி.ஜே.பி அரசின் ஆட்சியில்தான் பசுவதை தடைச்சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தம் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வட மாநிலங்களில், மாட்டுக் கறி வைத்திருந்ததாகக்கூறி, 20-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர். உயர் கல்விக்கு ‘பணம் இல்லை’ என்று கைவிரிக்கும் பி.ஜே.பி அரசுதான், பசு பாதுகாப்புக்கு 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தொழிற்கல்வி பயிலும் பட்டியல் சமூக மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. ஆனால், அவரது இறப்புக்குப் பிறகு இந்த அ.தி.மு.க அரசு, அந்தத் திட்டத்தையே ரத்துசெய்து விட்டது. இவர்களுடன் நாங்கள் எப்படி கூட்டணி அமைக்க முடியும்?’’