தினகரன் அணிக்குத் திடீர் யோகம்! - போராடிப் பெற்ற பொதுச்சின்னம்! | TTV Dhinakaran's AMMK gets common symbol for Parliament Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

தினகரன் அணிக்குத் திடீர் யோகம்! - போராடிப் பெற்ற பொதுச்சின்னம்!

‘அரசியல் இயக்கமாகப் பதிவு செய்யப்படாத ஓர் அணிக்கு, பொதுச்சின்னம் வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்தச் சாதனைக்குச் சொந்தமான அணி, தினகரன் தலைமையிலான ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!’

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஓர் அணியாகவும், தினகரன் - சசிகலா தலைமையினர் ஓர் அணியாகவும் இரண்டாகப் பிளவுபட்ட நேரத்தில், இரண்டு அணியினரும் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். இந்த வழக்கில், 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரை வழங்கியது நீதிமன்றம். இதை எதிர்த்து தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதேநேரம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் வெற்றியும் பெற்றார். ‘மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும்வரை இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும்... தேர்தலில் போட்டியிட எங்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும்’ என்று தினகரன் தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போது ‘எந்தத் தேர்தலும் நடைபெறாத நிலையில், சின்னம் குறித்தத் தேவை இப்போது இல்லை’ என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.