பயமுறுத்தும் பழைய பகை... மறக்காத தொண்டர்கள் - பதறும் ராமதாஸ்! | Election cooperative issue with PMK and ADMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

பயமுறுத்தும் பழைய பகை... மறக்காத தொண்டர்கள் - பதறும் ராமதாஸ்!

வேறுபாடுகளை மறந்து இரட்டை இலையும், மாம்பழமும் இணைந்தாலும்கூட இரு கட்சி களின் தொண்டர்களின் மத்தியில் எதிரெதிர் உணர்வுகள் நிலவுகின்றன. இந்தக் களநிலவரம் காரணமாக பா.ம.க தரப்பு கலக்கத்தில் உள்ளது. இதையொட்டி, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் சமீபகால உரையைக் கேட்டால், அவரே பதற்றத்தில் இருப்பதை உணரமுடிகிறது.

பா.ம.க-வை எதிர்த்துக் களமிறங்கி இருக்கும், தி.மு.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க., பா.ம.க இடையிலான பரம்பரைப் பகையை, பொருந்தாத, முரண்பாடான  கூட்டணியை வாக்காளர்களுக்கு நினைவூட்டு வதுதான் மருத்துவரின் பதற்றத்துக்குக் காரணம் என்கின்றார்கள். அ.தி.மு.க - பா.ம.க இடையேயான விரோதம் பத்து ஆண்டுகளுக்கும் மேலானது. 2006 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சி.வி.சண்முகத்தை ஒரு மர்ம கும்பல் கொலைசெய்ய முயன்றது. இந்தச் சம்பவத்தின்போது  சண்முகத்தின் சகோதரர் சி.வி.பாபுவின் மைத்துனர் முருகானந்தம் கொல்லப்பட்டார். காரின் அடியில் படுத்துக் கொண்டதால், சண்முகம் தப்பித்தார். இதுதொடர்பாக ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏழு பேர்மீது வழக்கும் போடப்பட்டது. இப்போது இந்த வழக்கு சி.பி.ஐ வசம் இருக்கிறது.

இன்னொரு சம்பவம், 2011 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த மரக்காணம் கலவரம்... “மரக்காணம் கலவரத்துக்கு பா.ம.க தான் பொறுப்பு, அக்கட்சியை தடைசெய்ய வேண்டும்” என்று சட்டமன்றத்திலேயே முழங்கினார் ஜெயலலிதா. திருச்சி சிறையிலிருந்த ராமதாஸை, அவரது உடல் நிலையைக் கருத்தில்கொண்டு விடுவிக்கவேண்டும் என்று பா.ம.க தரப்பில் இருந்து ஜெ-வுக்கு தூது அனுப்பப்பட்டது. அதனால், அவர் விடுவிக்கப் பட்டார். திருச்சி சிறையிலிருந்து மெலிந்த உடலுடனும் உள்ளடங்கிய கண்களுடனும் மருத்துவர் வெளிவந்ததை பா.ம.க-வினர் மறக்கவில்லை. கடைசிவரையில் ராமதாஸை ஜெயலலிதாவும் மன்னிக்கவே இல்லை.