மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்... | Mr.Kazhugu - Politics and Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“சோளிங்கரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீரவசனமாக பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போதே பக்கத்திலிருக்கும் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் நண்பரது வீட்டில் புகுந்து விளையாடியிருக்கிறது வருமானவரித் துறை...” என்றபடி வந்து அமர்ந்த கழுகாரிடம், “துரைமுருகன் விவகாரத்தில், என்னதான் நடக்கிறது?” என்று கேட்டோம்.

“துரைமுருகனின் காட்பாடி, காந்திநகர் வீட்டில், மார்ச் 29-ம் தேதி இரவு 10 மணிக்குப் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தொடர்ந்து அவருடைய மகனுக்குச் சொந்தமான கல்லூரிகள் உட்பட மூன்று இடங்களில் மார்ச் 30-ம் தேதி முழுவதும் சோதனை நடத்தினார்கள். வீட்டிலிருந்து இரண்டு பைகளில் வெறும் ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். பின்னர், வருமான வரித்துறைத் தரப்பிலிருந்து ‘சில ஆவணங்களும், பத்து லட்சம் ரூபாய் பணமும் மட்டும் கைப்பற்றப்பட்டது’ என்று தகவல் வெளியானது.”

“தி.மு.க-வுக்கு இந்த ரெய்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதுபோலவே?”

“ஆமாம். வேலூரில் கதிர் ஆனந்துக்கு எதிராகப் போட்டியிடும் ஏ.சி சண்முகம் வலுவான நபர். ‘சண்முகம் வீட்டில் எந்த ரெய்டும் நடத்தாமல், எதற்காக தி.மு.க-வை மட்டும் குறிவைக்கவேண்டும்’ என்று தி.மு.க தரப்பு உஷ்ணமாகிவிட்டது. உடனடியாக, அறிவாலயத்தில் சட்ட ஆலோசனையும் நடைபெற்றது. அதன்படி வருமானவரித் துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.”

“வருமான வரித்துறை எதற்காக வேலூரைக் குறிவைத்ததாம்?”

“வருமானவரித் துறையிடம் கேட்டால், ‘தகவல் இல்லாமலா நாங்கள் ரெய்டுக்குப் போவோம்’ என்கிறார்கள். துரைமுருகன் மட்டுமல்ல... நிறைய நபர்களை நாங்கள் கண்காணித்துவருகிறோம்’ என்றும் சொல்கிறார்கள். ‘துரைமுருகன் மகன் களத்தில் நிற்பதில், அதிருப்தியில் இருந்த தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவரே வருமான வரித்துறையிடம் போட்டுக்கொடுத்து விட்டார்’ என்கிற பேச்சு துரைமுருகன் முகாமில் எழுந்துள்ளது. அந்தச் சந்தேகம் அடுத்த இரண்டு நாள்களில் வலுவடைந்தும்விட்டது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க