எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ் | Parliament Election Express News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

‘சரக்கு’ பத்து ரவுண்டு... துப்பாக்கிச்சூடு ஒன்பது ரவுண்டு! 
                             
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (காவல்) மேற்பார்வையாளராக ஹரியானாவைச் சேர்ந்த ஹேமந்த் கால்சன் ஐ.ஜி-யை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அரியலூர் சர்க்கியூட் ஹவுஸில் தங்கியிருந்த இவர், மார்ச் 30-ம் தேதி பின்னிரவு 1.30 மணிக்கு ‘தமிழகக் காவல்துறையினர் கொடுக்கும் பாதுகாப்பு போதவில்லை; சாப்பாட்டில் சிக்கன் நன்றாகவே இல்லை’ என்று அருகிலிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று, அவரது பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி, சடசடவென ஒன்பது ரவுண்டுகள் வானத்தை நோக்கிச் சுட்டார். உடனே அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினார்கள். அதன்பின்பு அவர் படுத்துத் தூங்கிவிட்டார். இதுகுறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸார் கூறுகையில், “சரக்கு ஓவரா அடிச்சிக்கிட்டிருந்தார். ‘பத்து ரவுண்டு தாண்டிருச்சு. போதுங்க’ன்னு அட்வைஸ் பண்ணதுக்கு, ‘பத்து இல்லை... ஒன்பது ரவுண்டுதான் அடிச்சேன்’னு சொன்னவரு, ‘இந்தா, எத்தனை ரவுண்டுன்னு எண்ணிக்கோ’ன்னு துப்பாக்கியைப் பிடுங்கி ஒன்பது ரவுண்டு சுட்டார்” என்றார்கள். இதைத் தொடர்ந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஹரியானாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட கால்சன் மீது 336-ம் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது!

பறந்துவந்த செருப்பு... கடிந்துகொண்ட முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது உப்புண்டார்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் முதல்வரை நோக்கிச் செருப்பை வீசினார். செருப்பு அவர்மேல் படாமல் வேனின்மீது விழுந்தது. இதை எடப்பாடி கவனிக்கவில்லை. ஆனால், இதைப் பார்த்த அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். முதல்வர் அருகில் நின்றுகொண்டிருந்த வைத்திலிங்கமோ, செருப்பை உடனே எடுத்தால், அசிங்கமாகிவிடும் என்று நினைத்து, செருப்பை முதல்வர் பார்க்காதபடி மறைத்து நின்றார். சிறிது நேரத்தில், செருப்பு வீசப்பட்டத் தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்துக் கோபம் அடைந்த எடப்பாடி, “என்ன வைத்தி... தொகுதியை இப்படி வெச்சிருக்கீங்க?” என்று கடிந்துள்ளார். வைத்தி எவ்வளவு சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகவில்லையாம் எடப்பாடி!
                                                                                      
பொள்ளாச்சியைக் கலக்கும் கமல் வீடியோ!

பொள்ளாச்சிப் பாலியல் விவகாரம் தொடர்பாக, மய்யம் விசில் செயலியில் புகார்கொடுத்தார் மூகாம்பிகா. இதைத்தொடர்ந்து அவரையே வேட்பாளராக அறிவித்து விட்டார் கமல். விஜய் நடித்த, ‘தெறி’ படத்தில், பாலியல் குற்றம்செய்த வில்லனின் மகனைக் கொலைசெய்து பாலத்தில் தலைகீழாகத் தொங்க விடுவார்கள். இந்தக் காட்சியைப் பொள்ளாச்சிப் பாலியல் வழக்குடன் இணைத்துக் கமலும், பொள்ளாச்சி மக்களும் பேசுவதைப்போல மாற்றியுள்ளார் மூகாம்பிகா. “அவங்க எல்லாம் பெரிய இடத்து ஆளுங்க. நான் ஒரு சாதாரண வாக்காளன். நான் என்ன பண்ண முடியும்?” என்று பொள்ளாச்சி மக்கள் கேட்பதுபோல எடிட் செய்துள்ளனர். அதற்குக் கமல், “சரி, நீங்க ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கீங்க. அப்ப என்ன பண்ணு வீங்க?” என்று கேட்க, “இந்தப் பிரச்னையை வெளிக்கொண்டுவந்த மூகாம்பிகா மேடத்தை வேட்பாளராக அறிவித்து, அவரை வெற்றிபெற வைத்து, அதிகாரம் கொடுத்து அதன் மூலம் தண்டிப்பேன்” என்று மக்கள் சொல்ல, “போய் எங்க வேட்பாளர் யார் என்று பாருங்கள்” எனக் கமல் சொல்வது போல வீடியோவைத் தயாரித்துள்ளனர். கடைசியாக, மூகாம்பிகா வாக்குக்கேட்பதுபோல முடிகிறது அந்த வீடியோ.

கவிழ்க்கும் ஐடியா?

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி, “பிரசாரத் துண்டறிக்கைகள் கொடுத்தால் மட்டும் போதாது, துட்டை அள்ளிக் கொடுக்கணும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட என்னிடம் ஐம்பது லட்சம் ரூபாய் இருந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்று இருப்பேன்”என்று ஆதங்கத்துடன் பேசினார். அதைக்கேட்டுப் பதறிய நேரு, “ஜெயிக்க ஐடியா கொடுக்கிறதா நெனச்சு, கவிழ்க்கப் பாக்குறியா? தேர்தல் கமிஷனில் இருந்து  வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கிறாங்கய்யா” என்றதும் கூட்டம் கலகலத்தது.


வேட்பாளரைப் பேசவிடும் கமல்!