“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்” | Election awareness song release by N. Sankaraiah and Nallakannu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்”

சங்கரய்யாவும் நல்லகண்ணுவும் வெளியிட்ட பாடல்...

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ‘ஜனங்க ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் தேர்தல் பாடலைத் தயாரித்திருக்கிறார். இதனை 80 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, தியாகத் தழும்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் இரு பெரும் ஆளுமைகளான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள். பாடல் வெளியீட்டு நிகழ்வில் அந்த மூத்த ஆளுமைகள் சந்தித்துக்கொண்ட நெகிழ்வான தருணத்தைக் கண்முன் காணும் பாக்கியம் கிடைத்தது. அதன் லைவ் ரிலே இதோ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா, குரோம்பேட்டையில் உள்ள தன் வீட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணுவுக்காகக் காத்திருக்கிறார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், கவிஞர் யுகபாரதி, உதவி இயக்குநர் பிரம்மா ஆகியோருடன் சங்கரய்யாவின் வீட்டுக்கு நல்லகண்ணு வருகிறார். தள்ளாத வயதிலும் நல்லகண்ணுவைப் பார்த்தவுடன் பரவசம் பொங்க அவரது கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் சங்கரய்யா. அவரிடம் கரு.பழனியப்பன், ‘‘இந்தத் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதற்காக, ‘ஜனங்க ஜாக்கிரதை’ என்ற பாடலைத் தயாரித்துள்ளோம்” என்று சொல்லியவாறு, லேப்டாப்பை ஆன் செய்து, பாடலை ஓடவிடுகிறார்...

‘‘தேர்தல் வருது... தேர்தல் வருது ஜனங்க ஜாக்கிரதை
இந்தத் தேர்தலிலும் தெரிஞ்சுபோகும் பலரு யோக்யத
ஓட்டுக்கு காசு தந்தா உதைச்சி அவனை தொரத்துடா
உரிமைய வாங்க வந்தா ஊரக்கூட்டி கொளுத்துடா
ஒட்டுமொத்த நெலம மாற ஓட்டுதானே ஆயுதம்
அத எண்ணி நாம வாக்களிச்சா வாழும் ஜனநாயகம்...”

என்று நீள்கிறது அந்தப் பாட்டு.

டி.இமான் இசையில் யுகபாரதியின் பாடல் ஒலிக்க... பின்னணியில் மெரினா போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, நீட் எதிர்ப்புப் போராட்டம், அனிதா மரணம், ‘கோ பேக் மோடி’ போராட்டம், எட்டுவழிச்சாலைப் போராட்டம், ஜாக்டோ - ஜியோ போராட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடி மாணவி சோபியா கைது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... என்று காட்சிகள் விரிகின்றன. பாடல் சிறப்பாக இருப்பதாக கரு.பழனியப்பனையும், யுகபாரதியையும் இரு தலைவர்களும் கைகுலுக்கிப் பாராட்டுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க