தொலைந்துபோன தேர்தல் திருவிழா! - கான்ட்ராக்டர்கள் கையில் கட்சிக் கூட்டம்... | Decreasing Election Festivity - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

தொலைந்துபோன தேர்தல் திருவிழா! - கான்ட்ராக்டர்கள் கையில் கட்சிக் கூட்டம்...

“பிரசாரத்தில் கொடிபிடித்து வருபவர்களுக்கான கூலி 200 ரூபாயில் ஆரம்பம். பூத் கமிட்டிக்குக் குறைந்தபட்சத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய். சுவர் விளம்பரம் செய்ய ஒரு சுவருக்குக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்” என்று பட்டியல் வாசிக்கிறார்கள் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள். ஆம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் இந்தப் பொதுத்தேர்தல் களம், சூதாட்டக் களமாகவே மாறியிருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரின் அதிகபட்சச் செலவுத் தொகையாக ரூ.70 லட்சமும், சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கு ரூ.28 லட்சமும் நிர்ணயித்துள்ளது. ஆனால், ‘இந்தத் தொகை ஐந்து நாள்கள் தேர்தல் செலவுக்குக்கூடத் தாங்காது’ என்கிறார்கள் தமிழகத்தின் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள். முப்பது ஆண்டுகளுக்குமுன்பு வரை தேர்தல் என்றாலே திருவிழாவாகக் கொண்டாடப் பட்டது. கட்சி உறுப்பினர்கள் தங்கள் வீட்டு விசேஷமாகவே தேர்தலைக் கருதினார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிக் கிளை நிர்வாகிகள் கூடித் தேர்தல் பணியை எப்படிச் செய்வது என்று ஆலோசனை நடத்துவார்கள். கட்சித் தலைமையிலிருந்து கொடியும், சின்னம் பொறித்த பிட் நோட்டீஸும் மட்டுமே கிளை நிர்வாகி களுக்கு வந்துசேரும். தன் கட்சியின் சின்னம் பொறித்த பிட் நோட்டீஸ் தன் வீட்டுச் சுவரில் இருக்க வேண்டும் என்கிற வெறி ஒவ்வொரு கட்சிக்காரரிடமும் இருக்கும். கட்சிக் கொடியைத் தனது சைக்கிளில் கட்டிக்கொண்டு பவனி வருவது, இன்று சைரன் காரில் அமைச்சர்கள் பவனி வருவதற்கு இணையாக அன்று பார்க்கப்பட்டது. சுவர் விளம்பரத்தைக் காசுகொடுத்து வரையாமல், அந்தந்த ஊரின் கட்சிப் பிரமுகர்களே தங்கள் வீட்டுச் சுவர்களில் வரைந்துவைப்பார்கள். தன் வீட்டுக் கூரையில் கட்சிக் கொடியைப் பறக்கவிட்டு அழகு பார்த்த காட்சிகளும் உண்டு.