அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல் | IT and Election Commission favour to Ruling Party - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/04/2019)

அடாவடி ஆணையம்... ஆட்டிப்படைக்கும் ஐ.டி! - தில்லுமுல்லு தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்குவந்தபின், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கணக்கில்காட்டப்படாத பணம் அதிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கம், தங்கம், வெள்ளி, மது, பரிசுப் பொருள்கள் என இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 250 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. கண்டிப்பாகத் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டியே தீர வேண்டும். வருமான வரித்துறைக்கும் சபாஷ் சொல்லலாம்தான். ஆனால், ‘ஒரு கண்ணில் வெண்ணெய்... இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்று ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பாரபட்சம் காட்டினால், என்னவென்று சொல்வது? அந்த வகையில் தேர்தல் ஆணையமும், வருமானவரித் துறையும் ஆளும் அரசுக்குக் கைப்பாவையாக இருந்துகொண்டு அடாவடியாகவும், எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து ஆட்டிப்படைப்பவையாகவும் இருக்கின்றன! 

தற்போது பணம், தங்கம், வெள்ளி என்று இவர்கள் கணக்குக்காட்டுவது பெரும்பாலும் வணிகர்கள், தங்க நகை வியாபாரிகளிடமிருந்து அல்லது சாதாரண மக்களிடமிருந்து கைப்பற்றியவைதான். இவை தவிர, தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் வீட்டில் பிடிபட்டது 11.53 கோடி ரூபாய். திடீரென அதன் மதிப்பு, 30 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அரூரில், அரசுப் பேருந்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பிடிபட்டிருக்கிறது. அந்தப் பணமும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி செலவுகளுக்காக, தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டது என்கிறார்கள்.