“பார்ட் டைம் எம்.பி-க்கள் தேவையில்லை!” - விளாசுகிறார் தெஹ்லான் பாகவி... | Chennai Central SDPI Dehlan Baqavi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

“பார்ட் டைம் எம்.பி-க்கள் தேவையில்லை!” - விளாசுகிறார் தெஹ்லான் பாகவி...

த்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், தொழிலதிபர் சாம் பால் ஆகியோருக்கு எதிராக அ.ம.மு.க கூட்டணியில், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் ‘இமாம்’ தெஹ்லான் பாகவி. தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

“முதல்முறையாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?”

“எஸ்.டி.பி.ஐ கட்சி ஒரு கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. நானும் முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் பணி மூலம் எங்கள் கட்சி மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதை நன்றாக உணரமுடிகிறது. என்னைப் பொறுத்தவரை ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டு வழிபாடுசெய்வது மட்டுமே இறைவழிபாடு அல்ல. மக்களுக்குத் தொண்டுசெய்வதும், நீதிக்காகக் குரல்கொடுப்பதும், ஒழுக்கமான சமுதாயத்தைப் படைப்பதும் இறைவழிபாடுதான்.”

“நீங்கள் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், என்ன செய்யப்போகிறீர்கள்?”

“குடிநீர் பிரச்னைதான் இங்கே மிகவும் முக்கியமானது. மத்திய சென்னையின் உட்புறப் பகுதிகளில், ‘லாரித் தண்ணீர் வந்தால்தான் குடிநீர்’ என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகருக்கே இந்தக் கதி என்றால், கிராமப்புறங்கள் எப்படி இருக்கும்? தமிழக அரசுக்கே இது அவமானகரமான விஷயம். போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வுகாண அடுக்குமாடி பார்க்கிங் வசதிகள் கொண்டுவரப்பட வேண்டும். குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இங்கேயிருந்த எம்.பி-க்கள் தங்களது தனிப்பட்ட தொழில்களை மட்டுமே முழுநேரமாகக் கவனித்துக்கொண்டு, அவ்வப்போது மட்டும் டெல்லிக்குப் பறந்துசென்று, ‘பார்ட் டைம் எம்.பி’-களாக இருந்தார்கள். குறிப்பாக, இங்கு பத்து வருடங்களாக எம்.பி-யாக இருந்த தயாநிதி மாறன், பார்ட் டைமாகக்கூட மக்களுக்குச் சேவை செய்யவில்லை. எனக்கு எதிராகப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் கார்ப்பரேட் முதலாளிகள்தான். இந்த முதலாளிகளுக்குத் தொழில்தான் முக்கியம்.”