“ராகுல் காந்தி கேரளத்தின் சுற்றுலா பயணி மட்டுமே!” - சரிதா நாயர் சரவெடி | Kerala Saritha Nair interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

“ராகுல் காந்தி கேரளத்தின் சுற்றுலா பயணி மட்டுமே!” - சரிதா நாயர் சரவெடி

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிரபலங்கள்மீது சோலார் பேனல் மோசடி, பாலியல் புகார்களைக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். இடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க மூலம் தமிழக அரசியலில் குதிக்க வேண்டும் என்ற ஆசையில், நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் பச்சைமாலைச் சந்தித்துச் சால்வை போர்த்திச் சலசலப்பை ஏற்படுத்தினார். இப்போது, எர்ணாகுளம் மற்றும் வயநாடுத் தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள், அவர்மீதான வழக்குகளை காரணம்காட்டித் தள்ளுபடியாகியுள்ளன. அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகிவிட்டன, சரி ஏன் இந்தத் திடீர் அரசியல் பிரவேசம்?”

“நான் எம்.பி ஆகவேண்டும் என்ற ஆசையில் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸில் உள்ள ஐந்து பேருக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திவருகிறேன். எனது புகாரின் அடிப்படையில் மூன்று பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அதில், இரண்டு பேர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான துன்புறுத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், தேர்தலில் போட்டியிடக் கூடாது. அதனால், அந்த இரண்டு வேட்பாளர்களின் மனுக்கள்தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். என் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன். பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே அரசியலுக்கு வந்துள்ளேன்.”