மோடி விசிட்... கூட்டணித் தலைவர்கள் ஆப்சென்ட்! - இது கோவை குழப்பம்... | ADMK alliance leaders not attend in Kovai Modi meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

மோடி விசிட்... கூட்டணித் தலைவர்கள் ஆப்சென்ட்! - இது கோவை குழப்பம்...

அ.தி.மு.க–வுடன் கூட்டணி அமைத்ததாலோ என்னவோ, பி.ஜே.பி-யினரும் கூட்டம் சேர்க்கப்பழகி விட்டனர் போலிருக்கிறது. ஏப்ரல் 9-ம் தேதியன்று, கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு நன்றாகவே கூட்டம் சேர்த்திருந்தார்கள். அ.தி.மு.க அமைச்சர்களின் உபயமும் அதில் தெரிந்தது. ஆனால், கூட்டத்துக்கு முக்கியமாக வரவேண்டிய தே.மு.தி.க மற்றும் பா.ம.க தலைவர்கள் உட்பட ஈரோடு அ.தி.மு.க வேட்பாளரும் மிஸ்ஸிங்!

ஏப்ரல் 9-ம் தேதி மாலை 6.50 மணி அளவில் மோடி மேடை ஏறுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாலை 3.30 மணியிலிருந்தே கட்சியினர் மக்களை கொடிசியா மைதானத்துக்கு வரவழைக்கத் தொடங்கினார்கள். அப்போது வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட சில பி.ஜே.பி நிர்வாகிகளைத் தவிர வேறு யாரையும் மேடையில் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், வேட்பாளர்கள் மேடை ஏறினார்கள். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் துள்ளிக்குதித்து மேடையேறினார்.

மோடி வருவதற்கு முன்பு பேசிய பி.ஜே.பி-யின் எஸ்.ஆர்.சேகர், “ஸ்டாலின் மகன் தயாநிதி மாறன்’’ என்று உளற... மேடையில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டியதும், ‘உதயநிதி ஸ்டாலின்’ என்று சமாளித்தார். அடுத்துப் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன், “ஓட்டுக்காகப் பெண்களை நாம் டார்கெட் செய்ய வேண்டும். தினமும் நான்கு வீடுகளுக்குச் சென்று, வெங்காயம் உரித்துக்்கொடுத்து, அம்மா கொண்டு வந்தத் திட்டத்தை எல்லாம் சொன்னாலே நமக்கு ஓட்டுக் கிடைத்துவிடும்” என்று அசத்தல் ஐடியா கொடுத்துவிட்டு, கூட்டத்தைப் பார்க்க... கூட்டத்திலோ சலனமே இல்லை!