ஆந்திரத்தை ஆளப்போவது பாபுவா, ஜெகனா? | Who will rule Andhra Pradesh - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

ஆந்திரத்தை ஆளப்போவது பாபுவா, ஜெகனா?

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக இருக்கும் சூழலில், நமக்கு அண்டை மாநிலமான ஆந்திரத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஒரேகட்டமாக நடந்து முடிந்துவிட்டது. அங்குள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், கலவரம், கல்வீச்சு, உயிர்பலி எனப் பல பயங்கரங்களுக்கு நடுவே வாக்குப்பதிவானது 77 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது.

ஆந்திர மாநிலம்... ஆந்திரம், தெலங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின், ஆந்திரா சந்திக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி உருவாக்கியிருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் உருவாக்கியிருக்கும் ஜன சேனா, காங்கிரஸ், பி.ஜே.பி ஆகியவை முக்கியக் கட்சிகளாகக் களத்தில் நிற்கின்றன. இதில் வெற்றி சந்திரபாபுவுக்கா, ஜெகன்மோகனுக்கா என்பதாகத்தான் இருக்கிறது மோதல். இதற்கான விடை, மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகளின்போது தெரிந்துவிடும். பவன் கல்யாண் அட்லீஸ்ட் பாஸ்மார்க் எடுப்பாரா என்பதையும் அன்றே அறிந்துவிடலாம்!

கடந்த முறையைப்போல, இந்த முறை எளிதாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை, சந்திரபாபுவால். ஒருபுறம் கிராமங்களில் தனது அடித்தளத்தைத் தகர்க்கும் ஜெகன், மறுபுறம் நகரங்களில் தனது அடித்தளத்தை அசைக்கும் பவன் என்று அதிகமாய் அவதிப்பட்டுவிட்டார். ஜெகன் அவரது ஆட்சியின் சீரழிவுகளைப் பேசி அவரது பகல் தூக்கத்தைக் கெடுத்தால், பவன் அவரது வாரிசு அரசியலையும் சொத்துக் குவிப்பையும் பேசி ராத்திரித் தூக்கத்தையும் ரணமாக்கினார்.

உண்மையில், சந்திரபாபுவுக்கு முதல் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில், பெரிய சிக்கல்கள் எதுவுமில்லை. ‘மாநிலப் பிரிப்பில் ஆந்திரம் அதிகம் பாதிக்கப்பட்டது’ என்ற தோற்றம் இருந்ததால், ‘அவரும் என்ன செய்வார் பாவம்’ என்று கரிசனம் காட்டினார்கள் மக்கள். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘எதுவும் செய்யாவிட்டால் எப்படி?’ என்று கரித்துக்கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும், அமராவதி தலைநகரக் கட்டுமானமும் சிறப்பு அந்தஸ்து விவகாரமும் ஆட்சிக்காலம் முடியும் வரை சந்திரபாபுவை நிம்மதியாக இருக்கவிடவில்லை.