இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - ஜோதிமணி நம்பிக்கை | Karur Congress candidate Jothimani interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - ஜோதிமணி நம்பிக்கை

“ராகுல் காந்தியே நேரடியா ஸ்டாலின்கிட்ட பேசி ஜோதிமணிக்காக கரூர் தொகுதியை வாங்கியிருக்காராம்ல...” என்ற இமேஜுடன் வலம் வருகிறார், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஜோதிமணி. மத்திய இணை அமைச்சர், நாடாளுமன்றத் துணை சபாநாயகர், நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்… எனப் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான தம்பிதுரையை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார். பிரசாரத்துக்கு இடையில் சற்று ஓய்விலிருந்த ஜோதிமணியைச் சந்தித்துப் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ராகுல் காந்தியே ஸ்டாலினிடம் பேசி, கரூர் தொகுதியைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறதே?”

“என்னுடைய சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்துத்தான் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு ராகுல் காந்தி வழங்கியிருக்கிறார். இதற்காகக் காலம் முழுக்க ராகுல் காந்திக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  எந்தப் பின்புலமும் இல்லாத எனக்கு வாய்ப்பு கொடுத்ததன் மூலம் ‘காங்கிரஸில் காலம்காலமாக, குடும்ப அரசியலே மேலோங்கி இருக்கிறது’ என்ற விமர்சனத்தை சுக்குநூறாக்கி இருக்கிறார், ராகுல் காந்தி.’’

“நீண்ட அரசியல் அனுபவம், பல முறை எம்.பி என பலம்கொண்ட தம்பிதுரையை நீங்கள் வீழ்த்தி விடுவீர்களா?”

“பலமான வேட்பாளர் என்று அவரை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? நான்கு முறை கரூர் தொகுதியில் எம்.பி-யாக இருந்திருக்கிறார், சட்டத்துறை இணை அமைச்சராக இருந்திருக்கி றார். துணை சபாநாயகர் என்ற உயரிய பதவியிலும் இருந்திருக்கிறார். ஆனால், இத்தகைய பதவிகளை வைத்து கரூர் தொகுதிக்கு அவர் என்ன உருப்படியான திட்டத்தைக்கொண்டு வந்தார்? ‘எங்க ஊருக்கு என்ன செஞ்சீங்க?’ என்று கேள்வி கேட்டு மக்கள் அவரைத் துரத்தி வருகிறார்கள். என்னைக் கேட்டால்… அ.தி.மு.க. வேட்பாளர்களிலேயே பலவீனமான வேட்பாளர் தம்பிதுரைதான்.”

“தம்பிதுரை, தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்?”

“ஊருக்கு ஊர் பேருந்து நிறுத்தம், ஊருக்கு ஊர் நாடக மேடை… வேறு உருப்படியாக என்ன செய்திருக்கிறார்? இந்தியாவிலேயே நான்காவது பெரிய ஜவுளி ஏற்றுமதி நகரம் கரூர். பஸ் பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி, டெக்ஸ்டைல்ஸ் என்று தொழில்கள் நிறைந்த பகுதி இது. ஆனால், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவற்றால்... 50,000 சிறு, குறு தொழிற்கூடங்கள் இங்கே மூடப்பட்டுள்ளன. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க தம்பிதுரை என்ன செய்தார்?

தனது பதவியைப் பயன்படுத்தி ஒரு வேளாண் கல்லூரி உட்பட 45 கல்லூரிகளைச் சொந்தமாக நடத்தி வருகிறார் அவர். 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிக்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அவரது கல்லூரிகளில் கரூர் தொகுதி யைச் சேர்ந்த ஒரு மாணவனைக்கூட அவர் இலவசமாகப் படிக்க வைத்தது கிடையாது. தொகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம். குடிதண்ணீர் இல்லை என்று சொல்லித்தான் அவரை மக்கள் விரட்டியடிக் கிறார்கள். இந்தத் தேர்தலில் தம்பிதுரைக்குத் ‘தண்ணியில்தான் கண்டம்’.”