“வருமானவரித் துறையும் தேர்தல் ஆணையமும் பி.ஜே.பி-யின் துணை அமைப்புகள்!” | M.K.Stalin Exclusive Interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

“வருமானவரித் துறையும் தேர்தல் ஆணையமும் பி.ஜே.பி-யின் துணை அமைப்புகள்!”

சொல்லி அடிக்கும் மு.க.ஸ்டாலின்

ருணாநிதி இல்லாமல், தி.மு.க சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது. அந்தச் சோர்வு கட்சித் தொண்டர்களிடம் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். காலையில் ஒரு கூட்டம், மாலையில் ஒரு கூட்டம், அதிகாலை நடைப்பயிற்சியில் மக்கள் சந்திப்பு என்று பரபரப்புடன் வலம் வந்துகொண்டிருந்த ஸ்டாலினைப் பிரசாரக் களத்தில் சந்தித்தோம்.

‘‘தி.மு.க–வின் தலைவராக நீங்கள் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இது. எப்படி உணர்கிறீர்கள்?’’

“கலைஞரின் நற்பெயரைக் காப்பாற்றும் பிள்ளையாக, அவர் வகித்த தலைமைப் பொறுப்பை சிறப்பாக நடத்திக் காட்டினேன் என்ற பெயரை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். தேர்தல் என்றால் பெரும்பாலான வேலைகளை அவரே பார்த்துவிடுவார். இன்று அனைத்தும் எங்கள் தலைமேல் ஏற்றப்பட்டுள்ளது. கலைஞர் இருந்து எப்படிச் செயல்படுவாரோ, அதைப் பின்பற்றியே நாங்களும் தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளோம்.’’

‘‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?’’

‘‘எங்கே போனாலும் எடப்பாடியை, மோடியை எப்போது வீட்டுக்கு அனுப்புவீர்கள் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். தமிழகத்துக்கான எந்தத் திட்டத்தையும் இருவருமே செய்யவில்லை. ஊழலைத் தவிர எடப்பாடி ஒன்றும் செய்வதில்லை. அவருக்குக் கீழே இருக்கிற அமைச்சர்கள் ஒன்று, காமெடியன்களாக இருக்கிறார்கள்... அல்லது ஊழல் செய்பவர்களாக இருக்கிறார்கள். ‘அதைச் சாதிப்பேன், இதைச் சாதிப்பேன்’ என்று மோடி அதிகப்படியாக விளம்பரம் செய்துகொண்டது இப்போது அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது. அதனால் மோடியின் காமெடிகள், எடப்பாடியின் அரைவேக்காட்டுத்தனம் எல்லாம் மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது.”