புதிய யுத்தம்... மீண்டும் ரத்தம்! | Suicide bombings in Sri Lanka - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

புதிய யுத்தம்... மீண்டும் ரத்தம்!

‘உயிர்த்தெழுந்தார் இயேசுநாதர்’ எனப் பாடிக்கொண்டு இருந்த எவரும் ‘இன்னும் சிறிது நேரத்தில், தன்னுடைய உயிரே பறிபோய்விடும்’ என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். 290 பேரின் உயிர்களைப் பலிகொண்ட கடந்த ஈஸ்டர் ஞாயிறு இலங்கையின் வரலாற்றில் இன்னுமொரு கறுப்பு ஞாயிறு ஆகிவிட்டது!

கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையான ஈஸ்டர் கொண்டாட்டத்தில், மூழ்கியிருந்தன இலங்கையின் தேவாலயங்கள். தலைநகர் கொழும்புவின் முக்கிய இடமான கொச்சிக்கடை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. திடீரென பெரும் வெடிச்சத்தம். சில வினாடிகளில் தேவாலயத்தின் கூரைகளும் சுவர்களும் மனிதச்சதைகளையும் ரத்தங்களையும் பூசிக்கொண்டன. என்ன நடந்தது என்று யாராலும் யோசிக்கக்கூட முடியவில்லை.

நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம், கொழும்புவின் அதிசொகுசான ஷாங்ரிலா, கிங்ஸ்பரி, சின்னமன் கிராண்ட் என நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புவில் உள்ள சீயோன் தேவாலயம் என அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் தொடர்ந்தன. பிற்பகல் 1.45 மணியளவில் தெகிவளையில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவுக்கு அருகில் ஏழாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இறுதியாக கொழும்புவின் தெமத்தகொட பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களைத் தேடும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது அங்கும் வெடித்தது குண்டு. மூன்று போலீஸார் உயிரிழந்தனர்.