மிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

மிஸ்டர் கழுகு: பிளான் ‘பி’ எடப்பாடி... சந்தேகத்தில் ஸ்டாலின்!

‘தமிழகம் முழுக்கப் பரவலாக மழை பெய்யக்கூடும்’ என்கிற வானிலை அறிக்கையின்படி, சென்னையிலும் கருமேகங்கள் திரண்டன. அதற்கு நடுவே குளுகுளுவென வந்திறங்கிய கழுகார், செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

“ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆடு - புலி அரசியல் சுறுசுறுவென அரங்கேற ஆரம்பித்துவிட்டது. மே 23-ம் தேதி மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கப் போவது யார் என்பதற்கான விடை தெரிந்துவிடும். தமிழக முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி நீடிக்கவேண்டும் என்றால், 10 எம்.எல்.ஏ-க்கள் கண்டிப்பாகத் தேவை. இதை எளிதில் எட்டிவிடலாம் என்று அ.தி.மு.க தரப்பு உறுதியாக நம்பிக் கொண்டிருக்க, ‘ஆட்சிக்குச் சிக்கல்’ என்று மத்திய உளவுத்துறை ‘நோட்’ போட்டிருப்பது, எடப்பாடி தரப்பை அப்செட் ஆக்கிவிட்டதாம்.’’

“அதென்ன நோட்?’’

“தேர்தல் முடிந்த கையோடு மத்திய உளவுத்துறையான ஐ.பி தமிழகம் முழுக்க ஒரு சர்வே எடுத்துள்ளது. ‘28 நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க உறுதியாக வெல்லும். இரண்டு இடங்களில் இழுபறியாக இருக்கிறது. இதிலும்கூட கடைசியில் தி.மு.க வென்றுவிடும். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 11 தி.மு.க-வுக்கும், ஏழு அ.தி.மு.க-வுக்கும் கிடைக்கும். இந்த ஏழு இடங்களிலும்கூட கடும் நெருக்கடிக்கு இடையேதான் வெற்றி கிடைக்கும். இதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது’ என்கிறது அந்த ரிப்போர்ட். இது தெரிந்ததுமே, போர்டில் விதம்விதமாக நம்பர்களை எழுதி, அழித்து கணக்குகளைப் போட்டுப்பார்க்க ஆரம்பித்துவிட்டதாம் எடப்பாடி தரப்பு.’’

“அதென்ன கணக்கு?’’

“ஏழு தொகுதிகளில்தான் வெற்றி என்கிற நிலையில், மே 19-ம் தேதி நடக்கவிருக்கும் மீதமுள்ள நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும். இந்த நான்குமே அ.தி.மு.க கோட்டையாக உள்ள தொகுதிகள். என்றாலும், பணவிளையாட்டுக்கு மக்கள் பழகிவிட்டதால், இங்கெல்லாம் கூடுதலாக இரண்டாயிரம் ரூபாயைச் சேர்த்து கவனித்தால், கணிசமான வாக்குகள் நம் பக்கம் வந்துவிடும் என்று கணக்குப் போடுகிறார்களாம். இதற்காகவே அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் அத்தனை பேரையும் படைபடையாக நான்கு தொகுதிகளுக்கும் அனுப்பும் வேலை நடக்கிறது. அப்படியும்கூட வெற்றி கிடைக்காமல் போனால், ‘ப்ளான் பி’ தயாராக இருக்கிறது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க