இதுவரை நிறை வேறாத கனவு! | Mayawati become India's next Prime Minister - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

இதுவரை நிறை வேறாத கனவு!

ஓவியம்: அரஸ்

டந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்கிற வார்த்தை அதிகமாகவே பேசப்படுகிறது. பேசுவது, காங்கிரஸ்! இந்தியாவின் ஆதிக் கட்சி. ஆண்டாண்டு காலமாகப் பட்டியல் சமூகத்தினர் வாக்குவங்கியை அப்படியே அள்ளிக்கொள்ளும் கட்சி. இந்தியாவின் முதல் பட்டியல் சமூகக் குடியரசுத் தலைவரையும், முதல் பட்டியல் சமூக உள்துறை அமைச்சரையும், முதல் பட்டியல் சமூக மக்களவைத் தலைவரையும் கொண்டுவந்தது அவர்கள்தான். ஆனால், பிரதமர் பதவி என்று வரும்போது மட்டும், வேறுபக்கம் நாடினார்கள்.

‘ஒட்டுமொத்த இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி’ என்று உரிமை கொண்டாடும் பி.ஜே.பி-க்கும், இந்து பெரும்பான்மை தேசத்தில் ஒரு பட்டியல் சமூக இந்துவை உச்சப் பதவிக்குக் கொண்டுவருவதில் விருப்பமில்லைபோல. இதை விரிவாக விளக்க வேண்டிய தேவையே இல்லை. ‘பீம் சேனா தலைவர் ஷ்யாம் சுந்தர் ஒருமுறை சொன்னார்... ‘அவர்களால், அவர்களுக்காக, அவர்களின் நன்மைக்காக, நாங்கள் இந்துக்கள் ஆக்கப்பட்டோம்’ என்று. முன்னே நின்று முகத்தில் அறையும் உண்மை இது. பி.ஜே.பி-யினர் எப்போதுமே ‘நுட்ப அரசியல்’ செய்வதில் கைதேர்ந்தவர்கள். முஸ்லிம்களையும் பட்டியல் சமூகத்தினரையும் பொதுத்தளத்தில் விலக்கிவைக்கும் அரசியலையும் முன்னெடுப்பார்கள், அதேசமயத்தில் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதைப்போலவும் காட்டிக்கொள்வார்கள். ‘முஸ்லிம்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், ‘அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கினோமே’ என்பார்கள். ‘பட்டியல் சமூகத்தினருக்கு என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், ‘ராம்நாத் கோவிந்தையும், அதே பதவியில் அமரவைத்து அழகு பார்க்கிறோமே’ என்பார்கள்.

சரி விடுங்கள்... இது, இதுவரையிலான நிலை. இந்த முறை பட்டியல் சமூகத்திலிருந்து பிரதமராக ஒருவர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள், அரசியல் ஆய்வாளர்கள். நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்த கடந்த நான்கு மாத காலமாகவே மோடி, ராகுல் காந்தி தவிர்த்து சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், மம்தா ஆகியோர் பெயர்களுடன் மாயாவதியின் பெயரும் பிரதமர் பந்தயத்தில் அடிபடுகின்றன. அதைத்தான் அரசியல் ஆய்வாளர்கள், ‘பட்டியல் சமூகத்திலிருந்து’ என்று குறிப்பிட்டு சொல்கிறார்கள்!