புதிய கட்சி, பொதுச் செயலாளர் பதவி! - தினகரனின் திட்டம் என்ன? | TTV Dinakaran selected as a General Secretary of AMMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

புதிய கட்சி, பொதுச் செயலாளர் பதவி! - தினகரனின் திட்டம் என்ன?

‘அ.தி.மு.க–வைக் கைப்பற்றியே தீருவேன்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய டி.டி.வி.தினகரன், இப்போது அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரையிலும் அமைப்பாக மட்டுமே செயல்பட்டுவந்த அ.ம.மு.க-வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்துவந்தவர் தினகரன். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த மறுநாளே அ.ம.மு.க-வை தனிக் கட்சியாகப் பதிவு செய்ததுடன், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தன்னை அறிவித்து அதிரடியை அரங்கேற்றியுள்ளார்.

இதுகுறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘அ.ம.மு.க வெறும் அணியாகச் செயல்படும் சூழ்நிலை இனியும் தொடர்ந்தால், அது பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். இதை உச்ச நீதிமன்றத்தில் சின்னத்துக்காக நடந்த களேபரங்களிலிருந்தே புரிந்துகொண்டோம். ஒருபுறம் சசிகலா, அ.தி.மு.க-வுக்கு உரிமை கொண்டாடி வழக்கு நடத்திவருகிறார். மறுபுறம் அ.ம.மு.க–வுக்குச் சின்னம் உரிமை கேட்டு தினகரன் போராட்டம் நடத்தவேண்டியுள்ளது. இரண்டுக்குமான தீர்வுதான் இந்த நடவடிக்கை. நீண்ட ஆலோசனைக்குப் பின்பே, அ.ம.மு.க-வை கட்சியாக உடனடியாகப் பதிவு செய்ய முடிவு செய்தோம். நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் மே 19-ம் தேதிக்கு முன்பாகவே கட்சியைப் பதிவை செய்துவிட்டால், சின்னம் பிரச்னை எழாது. இந்தச் சட்டச் சிக்கல்கள் பற்றி பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவைச் சந்தித்து, வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விளக்கினார். அதற்குப் பின், சசிகலாவின் ஒப்புதலுடன்தான் கட்சியாகப் பதிவுசெய்ய முடிவானது.