கொடநாடு விவகாரம், தமிழக அரசியலில் தொடர் சூறாவளியாகச் சுழன்று வருகிறது. இதில் புதிய திருப்பமாக, பங்களாவுக்குள் புகுந்து கொள்ளையடிக்க கனகராஜ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது உள்ளிட்ட மேலும் அதிர்ச்சியூட்டும் பல பின்னணித் தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
முதலில், சின்னதாக ஒரு ஃபிளாஷ்பேக்... 2016 பிப்ரவரி 10-ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 14 ஜோடிகளுக்கு ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்த மணமகள்களில் ஒருவர், போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அறை உட்பட சகல இடங்களிலும் சகஜமாக வலம்வந்த ராணி. தன் பிரதானப் பணிப்பெண்ணான இந்த ராணியை, ‘என் அன்புக்குப் பாத்திரமானவர்’ என்று அந்த மேடையிலேயே புகழ்ந்துரைத்தார் ஜெயலலிதா!
இனி விஷயத்துக்கு வருவோம்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஷயானின் மனைவி, குழந்தை மற்றும் கொடநாடு எஸ்டேட் சி.சி.டி.வி கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். “எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படியே, கொடநாடு பங்களாவில் ஆவணங்களைத் திருடுகிறோம்” என்று தங்களிடம் கனகராஜ் கூறியதாகக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான், வாளையார் மனோஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.