மிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு குறிவைக்கும் மோடி! - ஐ.பி ரிப்போர்ட்... ஐ.டி ரெய்டு | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு குறிவைக்கும் மோடி! - ஐ.பி ரிப்போர்ட்... ஐ.டி ரெய்டு

‘‘தமிழகத்தின் முக்கியமான இடங்களில் ஐ.டி ரெய்டு நடக்கும் என்று கடந்த இதழில் சொல்லிச் சென்றீர். ஆனால், அந்த இதழ் கடைக்கு வருவதற்குள்ளாகவே ரெய்டு நடந்தேறிவிட்டதே?” என்றவாறு, பூங்கொத்துக் கொடுத்து கழுகாரை வரவேற்றோம். காலரைத் தூக்கிவிட்டபடி, செய்திகளுக்குள் புகுந்தார் கழுகார்.

‘‘ஆம்... ரெய்டு நடக்கும் என்று நான் சொன்ன அன்றே ரெய்டு தொடங்கிவிட்டது. நடக்கப்போவதைச் சொல்வதுதானே நம்ம ஸ்டைல். கடைசி ஓவரில் அடித்து ஆடுவதைப் போல, இருக்கும் சில நாள்களில், பிற கட்சிகளுக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்பதில் பி.ஜே.பி அரசு மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறது. முதலில் அ.தி.மு.க-வை வழிக்குக் கொண்டு வர ஐ.டி.ரெய்டுதான் உதவியது; இப்போது, தி.மு.க-வுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. இது, தி.மு.க-வைத் திக்குமுக்காட வைத்து, தேர்தல் நேரத்தில் நிலைகுலைய வைக்கும் வகையிலான ஏற்பாடு. தன்னுடைய அஸ்திரம் குறிதவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நிறையவே யோசித்து யோசித்துத்தான் பி.ஜே.பி தரப்பு, ஐ.டி ரெய்டு எனும் இந்த அஸ்திரத்தை ஏவியுள்ளது!’’

‘‘வணிக நிறுவனங்களில் நடக்கும் ரெய்டு களுக்கும், தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இது மோடி தரப்பை ஏகத்துக்கும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அதிலும் சில நாள்களுக்கு முன், தர்மபுரியில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘ஜெயலலிதா மரணத்தில் மோடியையும் விசாரிக்க வேண்டும்’ என்று கொளுத்திப்போட்டது, டெல்லியின் கோபத்தை அதிகப்படுத்திவிட்டது. தமிழிசை சௌந்திரராஜன், ‘ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மர்ம மரணத்தில் ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்’ என்று உடனடியாக வாய் திறந்தார். தற்போது நடந்திருக்கும் வருமான வரித்துறை ரெய்டுக்கும், இந்த வார்த்தைப் போருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள்!’’

‘‘இன்னும் தெளிவாகச் சொல்லும்!’’

‘‘லோட்டஸ் குழுமங்கள், ரேவதி குழும நிறுவனங்கள், ஜி ஸ்கொயர் உள்ளிட்ட பல இடங்களில், கடந்த  ஜனவரி 29-ம் தேதி வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. சென்னை மட்டுமன்றி கோவை உள்ளிட்ட 72 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், வணிக நிறுவனங்கள் மீதான சோதனையாகத் தெரிந்தாலும், தி.மு.க-வுக்கு ஒரு வகையில் செக் வைக்கவே இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.’’

‘‘ஓ...!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க