“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!” | Jayalalithaa friend Badar Sayeed joined to Congress from ADMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!”

பற்றவைக்கிறார் பதர் சயீத்

மேடைதோறும் அமைச்சர்கள், ‘இது அம்மாவின் ஆட்சி’ என்கிறார்கள். ஆனால், ‘அம்மா’வுக்கு நெருக்கமாக இருந்த யாரும் இப்போது கட்சிக்குள் செல்வாக்காக இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில், ஜெயலலிதாவின் நெருங்கியத் தோழியாக அறியப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான பதர் சயீத், அ.தி.மு.க-விலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளார். அங்கு சேர்ந்தவுடனேயே செய்தித் தொடர்பாளர் பதவி அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது. பதர் சயீத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க-விலிருந்த நீங்கள், திடீரென காங்கிரஸில் இணையக் காரணம் என்ன?”

‘‘திருவல்லிக்கேணி தொகுதியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். தற்போது எம்.எல்.ஏ-வாக இல்லாவிட்டாலும், அந்தத் தொகுதி மக்களின் பிரச்னைகளை என்னிடம் கூறுகிறார்கள். ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது எல்லோருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவந்தேன். அவர் மறைந்தபின், ஒன்றரை ஆண்டுகாலம் முடங்கிவிட்டேன். தொகுதி மக்களுக்கு உதவலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தேன். அவரோ, ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பாருங்கள்’ என்றார். முதல்வரைச் சந்திக்க, பலமுறை கேட்டும் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, நானாகத்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். எந்தப் பதவியையும் எதிர்பார்த்துப் போகவில்லை. அந்த இயக்கத்தின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை ஜெயலலிதா இறந்ததும் போய்விட்டது. இனி அங்கே இருக்க முடியாது என்றுதான் வெளியேறிவிட்டேன்.’’