மம்தாவா? மோடியா? - உச்சம் தொட்ட நிழல் யுத்தம்! | Mamata Banerjee vs Modi: Cold war at its peak - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

மம்தாவா? மோடியா? - உச்சம் தொட்ட நிழல் யுத்தம்!

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு அருகில் மம்தா பானர்ஜியின் பிரமாண்ட கட் அவுட் ஒன்று கம்பீரமாக நிற்கிறது. ‘இந்த முறை ஒரு வங்காளி பிரதமர் ஆவார். அந்தப் பெருமையை அடையப் போகிறவர் மம்தா பானர்ஜி’ என்று அதன் கீழே வாசகங்கள் ஒளிர்கின்றன. தன்னை வருங்காலப் பிரதமராகவே கற்பனை செய்துகொண்டிருக்கும் மம்தா பானர்ஜிக்கும், பிரதமராக இருக்கும் மோடிக்குமான நிழல் யுத்தத்தில், மேற்கு வங்காள போலீஸாரும் சி.பி.ஐ அதிகாரிகளும் நேரடியாக மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் நிகழும் இந்த மோதலுக்கான ஆரம்பப் புள்ளி உத்தரப் பிரதேசத்தில் தொடங்குகிறது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவிடும் வலுவுடன் இருக்கிறது. ‘உ.பி-யில் சுமார் 50 எம்.பி தொகுதிகளை பி.ஜே.பி இழக்கும்’ என்கின்றன கணிப்புகள். ‘இந்த இழப்பை எங்கு ஈடு செய்வது?’ என்ற பி.ஜே.பி-யின் தேடலில் முதலிடத்தில் வந்து நிற்பது மேற்கு வங்காளம்தான். ஏனெனில், உ.பி மற்றும் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பது மேற்கு வங்காளத்தில்தான். மொத்தம் 42 தொகுதிகள். கடந்த தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றது. காங்கிரஸ் நான்கு இடங்களைப் பிடிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பி.ஜே.பி-யும் தலா இரண்டு தொகுதிகளில் திருப்தி அடைந்தன.  இடைப்பட்ட இந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு பி.ஜே.பி கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா, ‘இம்முறை மேற்கு வங்காளத்தில் குறைந்தது 22 தொகுதிகளில் ஜெயிப்போம்’ என்று முழங்கியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸில் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் சிலரை ஈர்த்து, கட்சி தாவச் செய்தார். இதை எல்லாம் தாண்டி மம்தாவை வீழ்த்த பி.ஜே.பி கையில் எடுத்திருக்கும் ஆயுதம், சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு.