சாதி அமைப்பு நடத்திய மாநாடு... சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்! | Ex MDMK cadre Dhanamani controversial speech in Kovai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

சாதி அமைப்பு நடத்திய மாநாடு... சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!

கோவையில் நடைபெற்ற கம்மநாயுடு எழுச்சிப் பேரவை நடத்திய மாநாட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ம.தி.மு.க நிர்வாகி தனமணி வெங்கடபதி ஆகியோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அ.தி.மு.க கோவை மாநகர மாவட்டச் செயலாளரும், கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார், “இந்த மாநாட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

‘தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சிப் பேரவை மாநாடு’ ஜனவரி 27-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. இதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “முதல்வரிடம் நம் கம்மநாயுடு மாநாடு குறித்த அழைப்பிதழைக் காண்பித்து, சிறப்பு அனுமதி வாங்கிக் கலந்துகொண்டிருக்கிறேன். நம்மிடம் எழுச்சி உள்ளது. இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்ய வேண்டும். உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன். காலம் மாறுகிறதுதான். அதற்காக, பழைமையை மறக்கக் கூடாது. அனைத்துச் சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்வதே நம் சமுதாயத்தின் சிறப்பு. மதுரையில், மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த தினத்தை அரசு விழாவாக நடத்த முயற்சி எடுத்துள்ளேன். உழவர் பெரும் தலைவர் நாராயணசாமிக்கு 2.30 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசுபவர்தான். அவருக்கு கயத்தாறில் மணி மண்டபம் கட்ட முயற்சி செய்துவருகிறோம். நம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காகக் குழு அமைத்துச் செயல்படுங்கள். உங்களது தேவைகளுக்கு, அரசு தரப்பில் இருந்து என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன்” என்று முடித்தார்.