“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்” என்று ‘தர்மயுத்தம்‘ நடத்திய ஓ.பன்னீர் செல்வத்துக்கு இப்போது அதே ஆறுமுகசாமி ஆணையத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது ஆணையத்தில் ஆஜராகும்பட்சத்தில், மோடியை இழுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார் பன்னீர்செல்வம். பல்வேறு வகைகளில் பி.ஜே.பி தரப்புடன் நெருக்கம் காட்டி வரும் பன்னீர்செல்வம், மோடிக்கு எதிராகப் பேசுவதைத் தவிர்க்கவே, ஆணைய விசாரணைக்கு ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். ஆனால், க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. இனி என்ன செய்யப் போகிறார் பன்னீர்செல்வம்?
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர். ஆனால், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் நான்கு முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. கடந்த 2018, டிசம்பர், 20-ம் தேதி முதல்முறையாக ஆணையத் திலிருந்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது ஆஜராக முடியாததால், ஜனவரி மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஜனவரி 23-, பிப்ரவரி முதல் வாரம் எனத் தொடர்ந்து தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார் பன்னீர்செல்வம்.
இதுகுறித்து ஆணையத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் சிலர், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் தர்ம யுத்தத்தின்போது பன்னீர்செல்வம் வைத்த முக்கியமான கோரிக்கை. அதைவைத்தே அணிகள் இணைப்புக்கும் ஒப்புக்கொண்டார். அணிகள் இணைந்தவுடனே ஆணையம் அமைக்கப்பட, சசிகலா தரப்புக்கு நெருக்கடி உருவாகும் என்று எதிர்பார்த்தது பன்னீர் செல்வம் தரப்பு. ஆரம்பத்தில் நெருக்கடி போலத் தோன்றினாலும், நாள்கள் செல்லச்செல்ல சசிகலா தரப்புக்குச் சாதகமாகவே மாறியது ஆணைய விசாரணை. இதுதான் இப்போது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.