வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தி.மு.க-வின் பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவரது நண்பருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்த உடனே, சிறுமியின் பெற்றோரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ராஜ்குமார் தரப்பிலிருந்து வந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டே இருந்ததால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை. தொடர்ச்சியான முயற்சிகளுக்குப்பிறகு, சிறுமியின் தந்தையைச் சந்தித்துப் பேசினோம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளி. இவர், 15 வயதான தன் மகளை முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜ்குமாரின் வீட்டில், கடந்த 2012 ஜூன் 23-ம் தேதி வேலைக்குச் சேர்த்துவிட்டார். இதன் பின்னர், ஜூன் 25-ம் தேதியே தன் தாயாருக்குப் போன் செய்த சிறுமி, ‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. என்னைக் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அழுதார். பதறிய சிறுமியின் பெற்றோர், பெரம்பலூருக்குப் புறப்பட்டனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், ‘உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லி ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மயக்க நிலையில் இருந்த மகளைத்தான், அவர்கள் பார்க்க நேர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் சிறுமி இறந்துவிட்டார்.