ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி: காசநோய் பிடியில் தமிழகம்! - காப்பாற்ற வழி என்ன? | Special story about Tuberculosis (TB) - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி: காசநோய் பிடியில் தமிழகம்! - காப்பாற்ற வழி என்ன?

மீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்போம்” என்று சூளுரைத்திருக்கிறார். ஆனால், தமிழகத்தின் நிலையோ படுமோசமாக இருக்கிறது. காசநோய் பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களின் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். தென்னிந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள மாநிலமும் தமிழகம்தான். 2018-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1,04,123 பேருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக கடந்துசென்றுவிடக்கூடிய விஷயம் அல்ல இது. இப்படியான சூழலில், 2025-க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது சாத்தியமா? பின்னடைவுக்குக் காரணம் என்ன? தீர்வுகள் என்ன என்பதை எல்லாம் விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

காசநோய் என்பது பாக்டீரியாவால் காற்றில் பரவும் தொற்றுநோய். இருமல், தும்மல், எச்சில் உமிழ்தல் ஆகியவற்றால் காசநோயாளிகளிடம் இருந்து இந்தக் கிருமி பிறருக்குப் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்டவர்களை இந்தக் கிருமி எளிதில் தாக்கிவிடும். உலக அளவில் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் காரணங்களில் பத்தாவது இடத்தில் இருக்கிறது காசநோய். ஒரு காசநோயாளியிடமிருந்து ஓராண்டில் 10 முதல் 15 பேருக்கு இந்த நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் உண்டு. சரியான சிகிச்சைகள் பெறவில்லையெனில் மூன்றில் இரண்டு பேர் உயிரிழக்க நேரிடும்.

2017-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடி பேருக்குக் காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே ஆண்டில் காசநோயால் 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ‘குறிப்பிட்ட இடத்தில் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்படுவதை 2030-க்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’  என்று உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, உத்தரப்பிரதேச மாநிலம்தான் காசநோய் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2018-ம் ஆண்டில் மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் இந்தப் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. மருத்துவத் துறையைப் பொறுத்தவரை தமிழகம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. மத்திய அரசு மட்டுமின்றி, உலக சுகாதார நிறுவனம், ஐ.நா ஆகிய அமைப்புகள் நிர்ணயித்த சுகாதாரம் தொடர்பான இலக்குகளை முன்கூட்டியே அடைந்த மாநிலமும் தமிழகம்தான். தமிழகத்தின் சாதனைகளுக்கான அவ்வப்போது தில்லிக்குச் சென்று விருதுகளையும் வாங்கி வருகிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனாலும், காசநோய் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது தமிழகம். ஏன் இந்தப் பின்னடைவு?