“இது கலைஞர் தி.மு.க அல்ல!” - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி | Discuss about DMK alliance for Parliament Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

“இது கலைஞர் தி.மு.க அல்ல!” - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் தொடங்கி லெட்டர் பேடு கட்சிகள் வரை விதவிதமாக வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன. எதிரிகள் நண்பர்கள் ஆகிறார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆகிறார்கள். காலைப் பிடிப்பதும் காலை வாருவதுமான கரைவேட்டிகளின் காட்சிகளை இனி சகஜமாகக் காணலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் ‘40-க்கு 40’ என்கிற இலக்குடன் கூட்டணி வியூகத்தை வகுத்துவருகிறது தி.மு.க. அதேசமயம் தொகுதிப் பங்கீடு விஷயத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலினின் கறார் நடவடிக்கைகளைக் கண்டு கூட்டணி கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. வெளியே ஒற்றுமையாகக் காட்டிக்கொண்டாலும் தொகுதி பேர விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் யுத்தமே நடப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கூட்டணியில் உள்விவரம் அறிந்தவர்கள். என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணியில்?

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் உற்றுக் கவனிக்கப்படும் கட்சியாக மாறியிருக்கிறது தி.மு.க. கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. தலைவராக ஸ்டாலின் களம் இறங்கும் முதல் தேர்தலும் இதுவே. கூட்டணிக் கட்சிகளிடம் கருணாநிதி ஆரம்பத்தில் கறார் காட்டினாலும்கூட அதன் பிறகு கனிந்துபோகும் வாய்ப்புகளை, கடந்த தேர்தல்களில் பார்க்க முடிந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியால் ஐந்தாண்டுகள் மக்களவையில் தி.மு.க உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டது. அதற்குப் பரிகாரமாக இந்த முறை அதிக அளவில் தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்றால் மட்டுமே, டெல்லி அரசியல் லாபியைத் தன் வசம் கொண்டுவர முடியும் என ஸ்டாலின் நினைக்கி றார். தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள். “திருநாவுக்கரசர் மாற்றத்துக்கு ஸ்டாலினும் ஒரு காரணம். அவர் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டதை தி.மு.க விரும்பவில்லை. அவரை வைத்துக்கொண்டு தி.மு.க-வுடன் சீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினால், எதிர்பார்த்த இடங்களைப் பெற முடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் காங்கிரஸ் தலைமைக்கு இருந்ததை மறுக்க முடியாது” என்று சொல்பவர்கள், “புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி, சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்தாலும் தி.மு.க-வுக்கு இணக்கமானவராகவே இருப்பார்” என்கிறார்கள்.