கழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா? | ADMK speakers issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

கழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா?

அ.தி.மு.க-வில் பரிசுத் தொகை அபேஸ்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது அல்லவா. அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் மும்முரமாக நடந்தாலும் இன்னொரு பக்கம் உள்கட்சி புகைச்சல்களும் அதிகரித்துள்ளன. ‘பேச்சாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி, பொங்கல் பரிசுத்தொகையில் இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி கைவைத்திருக்கிறார்’ என்ற புகார் கொடிகட்டிப் பறக்கிறது. இன்னொருபுறம், ‘பட்டிமன்ற நடுவராகப் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகள் தராமல் துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைசெல்வனே ஆதிக்கம் செலுத்துகிறார்’ என்றும் கட்சியினர் புகார் கூறுகின்றனர். வைகைச்செல்வன் தூண்டுதலின் பேரிலேயே தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக வளர்மதி கொந்தளிக்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க பேச்சாளர்கள் சிலர் நம்மிடம் பேசினார்கள். “கழக விதிப்படி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள், வீரவணக்க நாள், கட்சியின் நிறுவன நாள் என்று ஆண்டுக்கு நான்கு முறையாவது கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களைக் கழகப் பிரிவு வாரியாக நடத்திட வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை, இதில் பேசும் பேச்சாளர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி, பொங்கலுக்கும் கணிசமான தொகை அன்பளிப்பாக அளிப்பது வழக்கம். கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரையின் கட்டுப்பாட்டில்தான் பேச்சாளர்கள் வருவார்கள். ஆனாலும், அவர்களுக்கான நிதியை விடுவிக்கும் பொறுப்பு பா.வளர்மதியிடம்தான் இருக்கிறது. கடந்த தீபாவளி, பொங்கலுக்காக விடுவிக்கப்பட்ட தொகையில்தான் பெரிய தொகையை வளர்மதி சுருட்டிவிட்டார். இச்செய்தியை முதல்வரிடம் வைகைச்செல்வன் கூறியதால்தான், அவருக்குத் தேர்தல் பிரசாரக் குழுப் பொறுப்பு வழங்கப்பட்டு, கட்சியிலிருந்து வளர்மதி ஓரங்கட்டப்படுகிறார்” என்றார்கள்.