இந்திய சமுதாயத்தின் கலாசார விழுமியங்கள் கிராமம் சார்ந்தவை. ஒருகாலத்தில் இந்தியாவின் முகமாக இருந்த கிராமங்கள், குப்பைக் கிடங்குகள்போல மாறிவிட்டன. மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்ந்த விவசாயிகள், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். சாலை விரிவாக்கம், நகர விரிவாக்கம், தொழில் வளர்ச்சியின் என்ற பெயர்களில் இரக்கமில்லாமல் கிராமங்கள் நசுக்கப்படுகின்றன. அடிப்படையில், ‘கிராமியக் கல்வி’ என்கிற விஷயத்தையே பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்த ஆட்சியாளர்களும் புறக்கணித்ததின் விளைவுதான் இது!
இந்திய மக்கள் தொகையில் 68 சதவிகிதம் பேர் கிராமத்தில் வாழ்கிறார்கள். அதில் 58 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன்று கிராம மக்கள் எனப்படுவோர் வாக்காளர், பயனாளி, மனுதாரர். அவ்வளவே. இவர்களின் முன்னேற்றத்துக்காக வாழ்வாதார மேம்பாட்டுக்காக நமது பாடத்திட்டத்தில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? உயர் கல்வித் துறையில் ஏதேனும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக் கின்றனவா? பொறியியலும் மருத்துவமும் தகவல் தொழில் நுட்பப் படிப்புகளும் நகரங்களின் வளர்ச்சியை மையப்படுத்துகின்றனவே தவிர, கிராமங்களின் வளர்ச்சி பற்றி அவை ஏதேனும் கற்பிக்கின்றனவா?