குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது? | Rocket Launchpad in Kulasekarapattinam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது?

தென் மாவட்ட மக்களின் கனவு நிறைவேறுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரபட்டினத்தில் நாட்டின் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. பாதுகாப்பு, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையிலும் பலன்தரக்கூடிய அந்த ஏவுதளத்தை அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தவில்லை என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துவருகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் முயற்சிகளால் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது. இஸ்ரோவின் சார்பாக விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கின்றன. இந்தத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மூன்றாவது ஏவுதளத்தை அமைப்பதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானி நாராயணா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், பல்வேறு மாநிலங்களிலும் பொருத்தமான இடத்தைத் தேடினார்கள். அப்போது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.