மிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா! - கூட்டணி குஸ்தி | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

மிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா! - கூட்டணி குஸ்தி

“மெட்ரோ ரயிலில் வந்துகொண்டே இருக்கிறேன். உம் அலுவலக வாசல் வரை வந்து இறங்கப்போகிறேன். சூடாக ஒரு ஃபில்டர் காபி கலந்து வையும்” என்று கழுகாரிடமிருந்து வந்த ‘வாட்ஸ் அப்’ செய்தி சிணுங்கியது. காபியைக் கலக்கி முடிப்பதற்குள் சிறகுகள் சடசடக்க வந்தமர்ந்தார் கழுகார்.

‘‘ஓ... மெட்ரோ ரயிலில் ஒரு நாள் முழுக்க இலவசமாகப் பயணிக்கலாம் என்றதும் தொற்றிக்கொண்டு வந்துவிட்டீரோ!’’ என்று சிரித்துக்கொண்டே நாம் கேட்க, முறைப்பைப் பதிலாகத் தந்த கழுகார், ‘’சென்னையில் திட்டமிடப்பட்ட முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. திருப்பூரில் இருந்து மோடி அதைத் தொடங்கியும் வைத்துவிட்டார். சென்னை மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, கட்டணமில்லாப் பயணத்தை அறிவித்தனர். அதை  இலவசம் என்று கிண்டலடிக்கிறீரே’’ என்று சொல்லிவிட்டு, விடுவிடுவெனச் செய்திக்குள் புகுந்தார்.

“மோடி தமிழகத்துக்கு வரும் முன்பே, கூட்டணி பற்றி முடிவு எடுத்திருக்க வேண்டும். அது முடியாததில், பி.ஜே.பி-க்காரர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். முக்கியக் காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை!’’

“ஆளுங்கட்சி தலைமையால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லையா?’’

‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கோவை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம், தனிப்பட்ட முறையில் பேசுவதற்காக, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காத்திருந்தார் தம்பிதுரை. ஆனால், அவரைப் பார்க்காமலேயே பிரதமர் மோடி டெல்லிக்குப் பறந்துவிட்டார். இதில், தம்பிதுரை அப்செட் என்கிறார்கள்.”

“அதனால்தான் மறுநாள் நடந்த பட்ஜெட் உரையில், ‘மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் தோல்வியடைந்துவிட்டன’ என்று விளாசினாரா?  கூட்டணி முடிவாகி விட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, ரூபாய் நோட்டின் நிறத்தை மாற்றியதைத் தவிர வேறு எதையும் பி.ஜே.பி அரசு செய்யவில்லை என்றெல்லாம் தம்பிதுரை பேசினால், தேர்தலை எப்படி இணைந்து எதிர்கொள்வார்களாம்?”

‘‘நல்ல கேள்விதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படியே பி.ஜே.பி-க்கு எதிராக தம்பிதுரை பேசுவதாகப் பலரும் சொல்கிறார்கள். ஒருபக்கம் இப்படிப் பேசுபவர், அப்புறம் எதற்கு பிரதமரைப் பார்க்க மூன்று மணி நேரம் காத்திருந்தார் என்பது யாருக்குமே புரியவில்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க