தி.மு.க-வில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளன. கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறுமா, பா.ம.க உள்ளே வருமா என்றெல்லாம் கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துள்ள நிலையில், சேலத்தில் நடந்த ஆதித் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்துகொண்டு, அருந்ததியர் சமூகத்தினரை அரவணைத்துப் பேசியிருக்கிறது தி.மு.க.
ஆதித் தமிழர் பேரவையின் வெள்ளி விழா மாநாடு பிப்ரவரி 9-ம் தேதி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான பெரும்பாலான ஏற்பாடுகளையும் தி.மு.க செய்திருந்தது என்று சொல்லப்படுகிறது. மாநாட்டில் தி.மு.க-வினர் மிக அதிகமாக இடம்பெற்றதையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் பேசிய தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளரான வி.பி.துரைசாமி, “இந்த மாநாட்டை அனைவரும் வாழ்த்திவிட்டுப் போனதைப்போல நான் போக முடியாது. நான் இச்சமூகத்தால் பயனடைந்தவன். ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட இந்தச் சமுதாயத்துக்கு கலைஞர் மூன்று சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கியதால், நாம் தி.மு.க-வுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்’’ என்றார்.