“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’ | Non toilet village Pottulupatti - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!’’

‘ஸ்வச் பாரத்’ போகாத பொட்டுலுப்பட்டி

பொட்டுலுப்பட்டிக்குள் நாம் நுழைந்தபோது, குண்டும்குழியுமான அந்தச் சாலையின் இருபுறங்களிலும் சிறுவர்கள் இயற்கை உபாதையைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பொதுக் கழிப்பறை வேண்டும் என்பது இந்தக் கிராம மக்களின் இருபது ஆண்டுகாலக் கோரிக்கை. சமீபத்தில், அங்கு கழிப்பறை கட்டுவதென்று பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. ஆனால், மக்களுக்கு வசதியான இடத்தில் கழிப்பறையைக் கட்டாமல், சுடுகாட்டில் கட்டியுள்ளனர். இதனால், கொதிப்பில் இருக்கிறார்கள் பொட்டுலுப்பட்டி மக்கள்.

‘பொதுக் கழிப்பறை வேண்டுமென்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்த எங்களுக்கு இப்போது சுடுகாட்டில் போய் அதைக் கட்டியிருக்கி றார்கள்’ என்று குமுறலுடன் நமக்குத் தகவல் தெரிவித்தனர் பொட்டுலுப்பட்டி மக்கள். உடனே அந்த ஊருக்குப் பயணமானோம். வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு மிக அருகே பொட்டுலுப்பட்டி அமைந்துள்ளது. இங்கு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அந்த ஏழை எளிய மக்கள், பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளைக் கழிக்க அருகில் உள்ள காட்டுப் பகுதியிலும், வயல்வெளி களிலும் ஒதுங்குகிறார்கள். தெருவோரமாகவோ, சாலையோரமாகவோ சிறு குழந்தைகள் ஒதுங்குகி றார்கள். பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது.