அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை! | TN Sports Department Degradation for Politics - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

அரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை!

அலங்கார பொம்மைகளாகச் சங்கத் தலைவர்கள்...

லிம்பிக்... ஓயாத இந்தியக் கனவு. ஓய்ந்துவிடக்கூடாத கனவும்கூட. குடும்பச் சூழலால் குலைந்துவிடாமலும் வறுமையால் சுருங்கிவிடாமலும் விளையாட்டுத் துறையில் முன்னேறிச் செல்கிறது இளைய தலைமுறை. காய்ந்த வயிற்றுடன் களத்தில் பாய்ந்து செல்லும் ஏழை வீரர்கள் இங்கே ஏராளம். கடற்கரை குப்பங்கள் தொடங்கிக் காய்ந்த கரிசல் பூமிவரை அவர்கள் இங்கே அங்கீகாரத்துக்காக ஏங்குகிறார்கள். ஆனால், வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது தொடங்கி வீரர்களின் இடுப்பை உடைப்பதுவரை அசிங்கமான அரசியலில் சிக்கி, சின்னாபின்னமாகிக்கிடக்கிறது இந்திய விளையாட்டுத் துறை. இந்தப் பாழாய்ப்போன அரசியலை பாலிவுட்டில் ‘டங்கல்’ தொடங்கி கோலிவுட்டில் ‘கனா’வரை பேசினாலும் மிஞ்சுவது வினா மட்டுமே. தமிழக விளையாட்டுத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. என்ன நடக்கிறது இங்கே?

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை, விளையாட்டுச் சங்கங்கள் விருப்பம்போல வளைத்து, அரசியல் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதுமே குவிந்துகிடக்கின்றன. தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டியில் சுமார் 50 பதிவு பெற்ற விளையாட்டுச் சங்கங்கள் உள்ளன. இவற்றின் நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள், தங்களை வளப்படுத்திக்கொள்ளவும், வெறும் பகட்டுக்காக மட்டுமே அந்தப் பதவியில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் விளையாட்டுத் துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள். குறிப்பாக, விளையாட்டுத் துறைக்குத் தொடர்பே இல்லாத அரசியல்வாதிகளாலும் பிற துறை பிரமுகர்களாலும் நிரம்பி வழிகிறது தமிழக விளையாட்டுத் துறை. தங்களது தேவைகள் என்ன, தங்களது பிரச்னைகள் என்ன, தங்களது குறைகள் என்ன என்பதைச் சொல்ல இயலாமலும்... அப்படியே சொன்னாலும் புறக்கணிக்கப்படுவதுமாக இங்கே விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்.

இதுகுறித்துப் பேசுபவர்கள், “இந்திய விளையாட்டு விதிகள் 2011-ன் படி, 70 வயதைக் கடந்தவர்கள் விளையாட்டுச் சங்கங்களில் எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. குறிப்பாக, 12 ஆண்டுகளுக்குமேல் தலைவர் பொறுப்பிலும், நான்கு ஆண்டுகளுக்குமேல் உறுப்பினர் பொறுப்பிலும் தொடர முடியாது. ஆனால், 79 வயதாகிவிட்ட ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் தமிழ்நாடு தடகளச் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகளாகத் தொடர்கிறார். அ.தி.மு.க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் மகனும் அ.தி.மு.க தொழில்நுட்ப அணிச் செயலாளருமான ராஜ்சத்யன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். விளையாட்டுத் துறையினருக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு அளித்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா எடுத்ததை தவிர, ராஜ்சத்யன் இந்தத் துறைக்காகச் செய்தது எதுவும் இல்லை. தமிழக இளைஞர்கள் அதிகம் அறிந்திராத ‘ரக்பி’ ஃபுட்பால் சங்கத்தின் தலைவரும் அவர்தான்” என்கிறார்கள்.

[X] Close

[X] Close