தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு? | Continuing Natural Disasters and careless Government - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

தொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு?

‘கஜா’ பேரிடரை வழியனுப்பி வைத்த கையோடு, 2019-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது, தமிழகம். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2016-ல் வர்தா புயல், 2017-ல் ஒகி புயல், 2018-ல் கஜா புயல் என வரிசையாக இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பேரிடர்களை இயற்கைப் பேரிடர் மற்றும் செயற்கையான பேரிடர் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையான பேரிடர்கள் ஒருமுறை உருவாகவே அதிக ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். ஆனால், செயற்கையான பேரிடர்கள் மனிதச் செயல்பாடுகளால் உருவாக்கப்படுபவை. அவை, கால இடைவெளிகள் இல்லாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கும். நிலம், நீர், காற்று ஆகிய மூன்று காரணிகளை அதிகமாகச் சேதப்படுத்தும்போதும், இயற்கையை நவீன அறிவியலால் வெல்ல முற்படும்போது ஏற்படும் குளறுபடிகளாலும் செயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையிலும், 2018-ம் ஆண்டிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.

கூடங்குளம் போராட்டம் நடந்தபோது, கூடங்குளத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் ‘இது மூன்றாம் தலைமுறை அணு உலை, எந்தப் பிரச்னையும் வராது' என்றார்கள். அணு உலைக்காகப் போராடிய மக்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இப்போது, தேசிய அணுமின் கழகமே முன்வந்து, ‘எங்களிடம் அணுக் கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறது. அன்று மக்கள் சொன்னவற்றை, இன்று விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.

தொழிற்சாலை நகரமான தூத்துக்குடியில் 20 வருடங்களுக்கு மேல் நடந்துவரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது. மொத்தமாக 14 உயிர்களைக் காவுவாங்கிய பின்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசு. ஆனாலும், ‘ஆலையை மூடியது தவறு’ என்று எதிர்த்துவந்த ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் பசுமைத் தீர்ப்பாயத்தின் மூலம் ஆலையைச் செயல்படுத்தத் தயாரானது. அப்படியும் ஆலையை திறக்கக்ககூடாது; ஆலையை மூடத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதிது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம்.

[X] Close

[X] Close