ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை! | 30 years Politics of Rajinikanth - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!

‘‘ஒரு சாமியாரிடம் குறும்புக்கார இளைஞன் ஒருவன், அவரை மடக்குவதாக நினைத்து, ‘என் கைக்குள் ஒரு பட்டாம்பூச்சி இருக்கிறது. அது, உயிருடன் இருக்கிறதா... இல்லையா எனச் சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பினான். செத்துவிட்டது என்று சொன்னால், பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டு விடுவான். உயிருடன் இருக்கிறது என்றால், கசக்கிக் கொன்றுவிடுவான். யோசித்த சாமியார், ‘எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது’ என்றார். இளைஞன் கப்சிப். அதுமாதிரி நல்லாட்சி தருவதும் தராததும் ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் நல்லாட்சி கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.’’ - 1989-ம் வருடம் மதுரையில் பெப்ஸி குளிர்பான அறிமுக விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சொன்ன இந்தக் குட்டிக்கதைதான், அவர் பேசிய முதல் அரசியல் பேச்சு. முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. அரசியல் என்னும் மெகா மாரத்தான் ஓட்டத்தில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறார் ரஜினி? 

1984 - 1996 காலகட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற எம்.பி தொகுதியில் நான்கு முறை ஜெயித்தவர் அடைக்கலராஜ். ரஜினியின் நீண்டகால நண்பரும், காங்கிரஸ் புள்ளியுமான அடைக்கலராஜுக்கு ஆதரவாக ஒட்டுப்போடச் சொல்லி, திருச்சி வாக்காளர்களுக்குக் கடிதம் எழுதிக்கொடுப்பார் ரஜினி. அதை அடைக்கலராஜ் நோட்டீஸ், போஸ்டர் போட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பார். இப்படித்தான் ரஜினி, அரசியலில் மெள்ள மெள்ளத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்படிக் கணக்குப் போட்டால்... ரஜினி அரசியலுக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அவர் தனது புதுக் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தது 2017, டிசம்பர் 31-ம் தேதிதான்.

இந்த 14 மாதங்களில், ரஜினி மக்கள் மன்றம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் அசைன்மென்ட் இலக்கு 68,000. தற்போதைக்கு 50,000 பூத் கமிட்டிகள் ரெடி. ஒரு பூத் கமிட்டிக்கு 30 உறுப்பினர்கள். சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்கள், ரஜினியின் கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ளனர். சமூக வலைதளங்களில் ரஜினியை விமர்சிப்பவர்களுக்குச் சுடச்சுட பதிலடி கொடுத்துவருகிறது மன்றத்தின் ஐ.டி பிரிவு. ரஜினி பெயரில் டி.வி சேனல் ஆரம்பிக்க விண்ணப்பித்திருக்கிறார்கள். இளைஞர் அணி, மகளிர் அணி.. என எட்டு அணிகள் உருவாக்கப்பட்டு, மாவட்ட அளவில் செயல்பட்டுவருகின்றன. இவ்வளவு நடந்தும், ரஜினி அரசியலுக்கு வருவாரா அல்லது தேர்தல் நேரத்தில் வாய்ஸ் மட்டும்தான் தருவாரா என்ற கேள்விக்கு மட்டும் தெளிவான விடையில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close