ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...” | How is Tamil Nadu without Jayalalitha - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”

இரா.கண்ணன், ஐக்கிய நாடுகளின் சோமாலியா ஹிர்ஷபெல்லே அலுவலகத் துணைத்தலைவர்

‘மோடியா... இந்த லேடியா?’ என்று 2014-ல் சவால் விட்டு வெற்றிபெற்றவர் ஜெயலலிதா. இன்று அவர் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்..? ஜெயலலிதாவின் ஆளுமையும், அரசியல் சாதுர்யமும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டுக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஒரு தமிழர் - தமிழச்சி துணைப் பிரதமராக வலம் வந்திருக்கலாம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலை மறந்து விடலாம். தமிழகத்தில் அவர் இருக்கையில் தோல்பாவையாய் இருந்தவர்கள் இன்று அவர் விட்டுச்சென்ற ஆட்சியை நடத்தும் விதத்தைப் பார்க்கையில், ‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய்யக் கருதி இருக்கிறாயடா?’ என்று பாரதி கேட்டது போலவே கேட்கத்தான் தோன்றுகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த நிலைக்குத் தமிழ்நாடு தாழ்ந்திருக்குமா? அவர் பெயரால் ஆட்சி நடத்தும் பழனிசாமியும், பன்னீர் செல்வமும் மோடியா, லேடியா என்பதற்கு மோடியே என்று பதிலுரைத்து, ஜெயலலிதா பாடுபட்டுக் கட்டிக்காத்த கட்சியைப் பதவிக்காக பி.ஜே.பி-யிடம் அடகு வைத்து விட்டனர். இன்று அ.தி.மு.க., தமிழக பி.ஜே.பி-யின் நீட்சியாய் மாறிப்போயிருக்கும் அவலத்தைக் காணச் சகிக்கவில்லை.

அ.தி.மு.க பிளவுபட பி.ஜே.பி-க்குக் கிட்டியது, பஞ்சாயத்து செய்யும் யோகம். அம்மா இல்லாத அ.தி.மு.க பூனைகளுக்கு அப்பம் பகிர்ந்து தந்த குரங்காய் மாறியிருப்பதில் பி.ஜே.பி-க்கு ஏக மகிழ்ச்சி. பிரதமர் மோடி, ‘பன்னீர் - பழனிசாமி இணைப்பால் தமிழ்நாடு புதிய உயரங்களைத் தொடும்’ என்றார்.  அவர்கள் தொட்டார்களோ இல்லையோ... அந்தக் கட்சியைக் கபளிகரம் செய்வதில் நிச்சயம் உயரம் தொட்டுவிட்டது பி.ஜே.பி. இன்னொரு பக்கம் வீரம் பேசும் தினகரனும், மோடியின் கண்ணசைவுக் காகவே காத்திருக்கிறார். தமிழ்நாட்டில் நோட்டாவுக்கும் கீழே இருக்கும் பி.ஜே.பி-க்குச் சவாரி செய்ய ஏதுவாய் அ.தி.மு.க-வை மாற்றிய பெருமை இவர்களையே சேரும். கட்சியைக் காப்பாற்ற ‘அம்மா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்’ என்று பொய் சொன்னோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்; மன்னிப்பும் கேட்டார். காய்ச்சலுக்காக அப்போலோ சென்ற தங்கள் தலைவியையே காப்பாற்ற முடியாதவர்கள், தங்கள் கட்சியை... தமிழ்நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்கள்?

[X] Close

[X] Close