பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ... | Chennai Metro Train experience - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

பயணங்கள் முடிவதில்லை!... சென்னை மெட்ரோ...

மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்

சென்னை மெட்ரோ ரயில், தனது சேவையை 2015-ம் ஆண்டு முதற்கொண்டே படிப்படியாக வழங்கி வருகிறது. திட்டத்தின் முதல்கட்டத்தின் கடைசிக் கண்ணி 2019 பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதுதான் வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை - டி.எம்.எஸ் அலுவலகம் வரையிலான எட்டுச் சுரங்க நிலையங்கள். இத்துடன் முதல்கட்டம் நிறைவை எட்டுகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்டத்தில், இரண்டு தடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முதல் தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக விமான நிலையத்தை அடைகிறது. இரண்டாவது தடம் சென்ட்ரலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, நூறடி சாலை வழியாகப் பரங்கிமலையை அடைகிறது. இரண்டு தடங்களுக்குமாக இப்போது சென்னை நகருக்குள் 45 கி.மீ நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு விட்டது.

இந்தியாவின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், பல நகரங்களில் கட்டுமானத்தில் இருக்கிறது. இவற்றோடு ஒப்பிடுகையில், சென்னை மெட்ரோவுக்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது... சென்னை மெட்ரோவின் சரிபாதி சுரங்கப் பாதை. மொத்தமுள்ள 32 நிலையங்களில் 20 நிலையங்கள் சுரங்க நிலையங்கள். சுரங்க ரயில் அமைப்பதற்குக் கால தாமதமாகும்; மேம்பாலப் பாதையைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டுமானச் செலவும் அதிகம். மேலும், மேம்பால ரயிலைப்போல வெளிக்காற்றும், வெளிச்சமும் சுரங்க ரயில் நிலையங்களில் சாத்தியமில்லை. ஆகவேதான், இந்தியாவின் பல நகரங்களும், முழுவதுமாகவோ அல்லது அதிகபட்சமாகவோ மேம்பால ரயிலை நாடுகின்றன. ஹைதராபாத், கொச்சி, நொய்டா, குர்கான் முதலான நகரங்களின் மெட்ரோ முழுவதும் மேம்பாலப் பாதையாலானது. பெங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர் நகரங்களில் சுரங்க ரயில் உண்டு. ஆனால், அவற்றின் நீளம் மிகக் குறைவு. மும்பையின் ஏழு தடங்களில் ஒன்றே ஒன்றுதான் சுரங்க ரயில். டெல்லி, கொல்கத்தா மெட்ரோக்களில் கணிசமான சுரங்க ரயில் பாதை உண்டு. எனினும், சென்னை மெட்ரோவைப்போல் பாதிக்கும் அதிகமில்லை. இந்தியாவுக்கு வெளியே பார்த்தால், நிலைமை நேர்மாறானது. லண்டன், நியூயார்க், மாஸ்கோ, பாரிஸ், ஹாங்காங், சிங்கப்பூர், பெய்ஜிங், ஷாங்காய் என்று வளர்ந்த நகரங்கள் அனைத்தும் மெட்ரோ ரயிலைப் பூமிக்குக் கீழேதான் அமைத்திருக்கின்றன. காரணம், நீண்டகாலப் பயன்பாட்டைக் கணக்கிட்டால் சுரங்க ரயிலே சிறந்தது. ஆகவேதான், சென்னை மெட்ரோவும் சுரங்க ரயிலைக் கூடுதலாக நாடியிருக்கிறது. 

மெட்ரோ ரயில் போன்ற உள்கட்டுமானப் பணிகள் நூற்றாண்டுக் காலமும் அதற்கு அதிகமாகவும் நீடித்திருக்கும். அதற்கேற்ற விதமாக அவை வடிவமைக்கப்படுகின்றன. தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறுகலான தெருக்களில், மேம்பால ரயிலைக் கட்டினால் வீதியின் பயன்பாடும் அகலமும் குறைந்துபோகும். அதாவது, நூற்றாண்டுக் காலத்துக்குக் குறைந்துபோகும். சாலையின் பழைய அகலத்தை, ஒருகாலத்திலும் மீட்டெடுக்க முடியாது என்று பொருள். அடுத்ததாக, சுரங்க ரயிலால் நெரிசலான சாலைகளில், சாலைக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகளின் கணிசமான பேரைப் பூமிக்குக்கீழ் கடத்திவிட்டு, அதன்மூலம் சாலையின் நெரிசலைக் குறைக்க முடிகிறது. அந்தப் பயணிகள் சாலையின்மேல் பிற வாகனங்களில் பயணித்திருந்தால், உண்டாகக்கூடிய சுற்றுச்சூழல் மாசுக்கு விடைகொடுக்க முடிகிறது.

[X] Close

[X] Close