இரட்டை இலக்கத் தொகுதிகள்... இலையுடன் கூட்டணி! - பா.ம.க ‘பலே’ பார்முலா

“திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பா.ம.க., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட கட்சியுடனே கூட்டணி வியூகத்தை அமைக்க இருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இதற்கான ஆலோசனைகள் நடந்துவருகின்றன. விரைவில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை” என்கிறார்கள் பா.ம.க-வின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி - தே.மு.தி.க தலைமையிலான கூட்டணி, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று பா.ம.க களம் இறங்கியது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி மட்டுமே வெற்றிபெற்றார். சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட பா.ம.க வெற்றிபெறவில்லை. ஆனாலும், சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பா.ம.க பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பெற்ற அனுபவத்தைக்கொண்டு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் களமிறங்கக் கூடாது என்ற முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு அ.ம.மு.க-வுடன் கூட்டணி சேரலாம் என்று பா.ம.க தரப்பில் ஆலோசனை எழுந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் அப்போது நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், ‘நாம் கட்சி ஆரம்பித்து 30 ஆண்டுகளாகிவிட்டன. நமக்கென்று வாக்கு வங்கி இருப்பதை, கடந்த தேர்தல்களில் நிரூபித்துள்ளோம். தமிழக அரசியலில் சீனியராக இருக்கும் நாம், இப்போது ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை’ என்று ராமதாஸ் தெளிவாகச் சொல்லிவிட்டாராம். இதனால், அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்துதான் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியிருக்கின்றன” என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick