கழுகார் பதில்கள்!

எஸ்.கதிரேசன், நாமக்கல்.
பிரதமர் நரேந்திர மோடியை ‘சாடிஸ்ட்’ என்று மீண்டும் மீண்டும் மேடைகளில் மு.க.ஸ்டாலின் வர்ணிப்பது சரியா?


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. நாளையே, ராகுல் காந்திகூட ‘சாடிஸ்ட்’டாக மாறலாம். யார் கண்டது!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.
உங்களின் பதில்கள் எல்லாம் அரசுக்கு எதிரானவையாகவே இருக்கின்றன. தமிழக அரசு மீது என்ன கோபம்?


பாஸ்... கோபப்படுங்க. எல்லாத்தையும் உள்ளுக்குள்ளே அடக்கிவெச்சுட்டே இருந்தா, அப்புறம் பீ.பி எகிற ஆரம்பிக்கும். ஹார்ட் அட்டாக் தொடங்கி பல பிரச்னைகளும் நம்மை பலி வாங்கிடும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

குஜராத் மாநிலத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை ஆகிவிட்டனரே?


நம் ஊரில் மட்டுமல்ல, ஹாலிவுட்டில் எடுக்கப்படும் க்ரைம் த்ரில்லர்கள் எல்லாம், இந்த நிஜக் கதையிடம் பிச்சை வாங்க வேண்டும். சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கவுசர் பி இருவரும், 2005-ல் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைக் கொல்ல திட்டம் தீட்டியதாகக் காவல்துறைச் சந்தேகம் கிளப்பியது. இந்நிலையில், சொராபுதீன், கவுசர் பி மற்றும் உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி மூவரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ‘போலி என்கவுன்டர்’ என்று உச்ச நீதிமன்றம் படியேறியது வழக்கு. சி.பி.ஐ விசாரணையில் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா (தற்போது பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர்), உயர் அதிகாரிகள், காவலர்கள் எனப் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு காட்சிகள் விறுவிறுப்பாகின. விசாரணை நீதிபதி லோயா மர்ம மரணம்; அமித் ஷா, உயரதிகாரிகள் எனப் பலரும் வழக்கிலிருந்து விடுவிப்பு; விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்; சாட்சிகள் பல்டி எல்லாம் முடிந்து சுபம் போடப்பட்டுவிட்டது.

‘சொராபுதீன், கவுசர் மற்றும் பிரஜாபதிக்காக வருத்தப்படுகிறேன். ஆனால், ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில்தான் நீதிமன்றம் இருக்கிறது’ என்று சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார் நீதிபதி சர்மா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick