மிஸ்டர் கழுகு: திருவாரூர் தேர்தல் டெஸ்ட்! - குஷி... பிஸி... அதிர்ச்சி

“தேர்தலோ... தேர்தல்!” சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தால், கழுகார்! நம் ஆச்சர்ய ரியாக்‌ஷனைக் கவனிக்காதவராக, “சட்டசபை செய்திகளில் இருந்தே தொடங்குகிறேன்” என்றபடி, செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘கவர்னரை வைத்தே மத்திய அரசுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி கொடுத்துள்ளார் என அ.தி.மு.க-வினர் சிலாகித்துப் பேசுகிறார்கள். கடந்த ஆண்டு கவர்னர் உரையில், மத்திய அரசைத் தாஜா செய்யும்படியான வார்த்தைகள் அதிகம் இருந்தன. இந்தமுறை, அதே கவர்னர் உரை மூலமாக மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிவு வந்துவிட்டது. ஜி.எஸ்.டி வரி வருவாயில், தமிழக அரசுக்கான 14 சதவிகிதப் பங்கான ரூ.7 ஆயிரம் கோடி மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பது முக்கியமான விஷயம். இதை கவர்னர் உரையில் சேர்த்தது எடப்பாடி வித்தை’ என்று குதூகலத்துடன் சொல்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.’’

“சரி, தி.மு.க வெளிநடப்பின் பின்னணி என்னவோ?’’

‘‘கஜா புயல் நிவாரணம், ஜெயலலிதா மரணம் குறித்த சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டு, குட்கா விவகாரம் உள்ளிட்ட விவரங்கள் கவர்னர் உரையில் உள்ளனவா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்ப, தனது உரை முடிந்த பிறகு இதைப் பற்றி பேசலாம் என்று கவர்னர் தெரிவித்தார். உடனே, தி.மு.க உறுப்பினர்களுடன் வெளியேறிவிட்டார் ஸ்டாலின்.’’

‘‘அன்றைய தினமே அறிவாலயத்தில் கூட்டம் நடத்தினார்களே?’’

‘‘திருவாரூர் தேர்தலைப் பற்றியே விரிவாகப் பேசியுள்ளனர். ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அறிவிப்பு அதிர்ச்சியைத்தான் தந்துள்ளது. முழுக்க முழுக்க தி.மு.க-வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று திட்டமிட்டே மத்திய அரசு காய்நகர்த்த ஆரம்பித்துள்ளது. சமீபகாலமாக பி.ஜே.பி-க்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் தி.மு.க-வைப் பலவீனப்படுத்த வேண்டுமென்று டெல்லி பி.ஜே.பி தரப்பில் விவாதித்துள்ளனர். அதற்குத் தோதாக, இடைத்தேர்தல் விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick