என்ன செய்தார் எம்.பி? - கே.ஆர்.பி.பிரபாகரன் (திருநெல்வேலி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மனுவுக்கு உடனுக்குடன் நடவடிக்கை... நல்லது செய்திருக்கிறார் எம்.பி!

#EnnaSeitharMP
#MyMPsScore

திர்ஷ்டம் இருந்தால் அ.தி.மு.க-வில் அடித்தட்டு நிலையில் இருக்கும்  தொண்டனும் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்பதற்கு, திருநெல்வேலி எம்.பி-யான கே.ஆர்.பி.பிரபாகரன் ஓர் உதாரணம். இவர், கடந்த தேர்தலின்போது, எம்.பி சீட் கேட்டு கட்சித் தலைமையிடம் விருப்ப மனுத் தாக்கல் செய்யாதவர். போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்தவர்களுக்குப் போதிய தகுதிகள் இல்லாததால், தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்துவந்த பிரபாகரனுக்கு யோகம் அடித்தது.  இப்படித்தான், சாதாரணத் தொண்டனாக இருந்த பிரபாகரனுக்கு, எம்.பி வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தில் இருந்து வென்ற எம்.பி-களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வயதுடைய எம்.பி என்ற பெருமையும் பிரபாகரனுக்கு உண்டு. அதெல்லாம் இருக்கட்டும், வாக்களித்த தொகுதி மக்களுக்கு பிரபாகரன் எப்படி நன்றி செலுத்தியிருக்கிறார்?

“சொல்லும்படியான திட்டங்கள் எதையும் அவர் கொண்டுவரவில்லை’’ என்று தொகுதி மக்கள் புலம்புகிறார்கள்.

“தி.மு.க ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சிக்காக நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அங்கு அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருப்படியான நிறுவனங்கள் இல்லை.  கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்காவிலும் இதே நிலைதான். அங்கே எந்த நிறுவனமும் வரவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த ஸிண்டெல் நிறுவனம் 25 ஏக்கரில் கம்பெனியைத் தொடங்கத் திட்டமிட்டு, முதற்கட்டமாக அலுவலகம் கட்டியது. ஆனால், அனுமதி வழங்குவதில் திட்டமிட்டே சிலர் தாமதம் செய்தனர். பணிகளை நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டது. அந்த நிறுவனத்திடம் பேசி, அவர்களை அழைத்து வர எம்.பி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில்நுட்பப் பூங்கா ஆகிய இரண்டையும் உயிர்ப்புடன் செயல்பட வைத்திருந்தாலே ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்” என்று குமுறுகிறார்கள், தொழில் துறையினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick