மிஸ்டர் கழுகு: திருவாரூர் தேர்தல் ரத்து... தி.மு.க-வில் நடந்த உள்குத்து!

ளைப்புடன் வந்த கழுகாரிடம், கருப்பட்டிக் காபியைக் கொடுத்துவிட்டு, “இடைத்தேர்தலை இடைமறித்துவிட்டதே தேர்தல் ஆணையம்?” என்றோம்.

‘‘கஜா புயலின் வடுவே ஆறாத நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அப்போதே அதற்கு, கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ‘திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச்சதி’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொந்தளித்துப் பேட்டி கொடுத்தார். இந்த தேர்தல் அறிவிப்பை பிஸியாக எதிர்கொண்ட ஒரே கட்சி தினகரனின் அ.ம.மு.க மட்டுமே. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்றுத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு முன்பும் பின்புமாக நடந்த சில சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.’’

‘‘எதைச் சொல்கிறீர் நீர்?’’

‘‘தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கடந்த டிசம்பர் 3-ம் தேதி அன்றே, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி, ‘வரும் ஏப்ரல்வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம். திருவாரூரில், இயல்பு நிலை திரும்ப மூன்று மாதங்கள் ஆகும். அதனால், திருப்பரங்குன்றம் தவிர மற்ற 19 தொகுதிகளுக்கும் ஏப்ரல்வரை தேர்தல் வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டதால்தான், தேர்தலைத் தள்ளி வைத்திருக்கிறார்களாம். இந்தத் தகவல் ஆளும் தரப்புக்கு ஏற்கெனவே தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்திருக்கிறார்கள்.’’

‘‘அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு தள்ளிப்போனதற்கு, இதுமட்டும்தான் காரணமா?’’

‘‘இதுமட்டுமல்ல... தேர்தல் ஆணையத்தின் கடிதம், கடந்த 6-ம் தேதியே ரெடியாகி விட்டது. அதை, ‘அ.தி.மு.க தரப்பு ஸ்மெல் செய்துவிட்டார்கள்’ என்கிறார்கள். இதுதெரிந்துதான் வேட்பாளர் அறிவிப்பைத் தாமதப்படுத்தியுள்ளனர்.’’

‘‘ஓஹோ...”

‘‘ஆமாம்... திருவாரூர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அ.தி.மு.க தரப்பு தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டவில்லை. இதையெல்லாம் தி.மு.க தரப்பும், தினகரன் தரப்பும் கவனிக்கத் தவறவில்லை. அதேபோல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்வரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சந்தித்துப் பேசினர். தேர்தலில் போட்டியிடுவது பற்றிக் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று பி.ஜே.பி-யும் இழுத்தது. இதையெல்லாம் முன்வைத்துப் பேசுபவர்கள், ‘இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்த தகவல் அ.தி.மு.க தரப்புக்கு முன்பே வந்துவிட்டது’ என்கிறார்கள். இறுதியில், அனைத்துக் கட்சியினரும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததைக் காரணம் காட்டி, தேர்தலைத் தள்ளி வைத்துவிட்டது தேர்தல் ஆணையம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick