என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை) | Enna Seithar MP - Coimbatore - Nagarajan - Junior Vikatan | ஜூனியர் விகடன்

என்ன செய்தார் எம்.பி? - நாகராஜன் (கோவை)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
“எம்.பி முகம் மறந்து போச்சு...”

#EnnaSeitharMP
#MyMPsScore

தீவிர அ.தி.மு.க விசுவாசியான நாகராஜன் ஒரு வழக்கறிஞர். தளவாய் சுந்தரம் மூலம் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். சசிகலா தரப்புடன் நெருக்கமானார். சொத்துக் குவிப்பு வழக்கின் வழக்கறிஞர் குழுவில் இடம்பிடித்து ஜெயலலிதாவின் அறிமுகத்தையும் பெற்றார். இந்த அறிமுகமே அவரை கோவை எம்.பி-யாக ஆக்கியது. தர்மயுத்தத்தினால் அ.தி.மு.க பிளவுபட்டபோது, டிடி.வி தினகரன் பக்கம் நின்றார். சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தபோது, சசிகலாவின் பரோலுக்கு அ.தி.மு.க எம்.பி-க்கள் யாரும் ஜாமீன் கடிதம் கொடுக்க முன்வராத நிலையில், தாமாக முன்வந்து கடிதம் கொடுத்து விசுவாசம் காட்டினார் நாகராஜன். எல்லாம் சரி, தனக்கு வாக்களித்த கோவை மக்களுக்கு விசுவாசம் காட்டினாரா நாகராஜன்?

‘‘எம்.பி நாகராஜனா? அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? ஓட்டுக் கேட்டு வந்தாரே... அவரா? அப்போ பார்த்ததுதான், அவர் முகமே எங்களுக்கு மறந்துபோச்சு. தொகுதி மக்களுக்காக அவர் குரல் கொடுத்து நாங்க கேட்டதே இல்ல..” என்று தொகுதி முழுக்கக் குமுறல்கள் கேட்கின்றன.

ம.தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், “கோவை - சென்னை இடையே விரைவு ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இது எம்.பி-க்கு தெரியுமா என்பதே சந்தேகம்தான். கோவையில் ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லாததுப் பெரும் குறை. கோவையில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்தார்கள். அதைச் செயல்படுத்த எம்.பி எதுவும் செய்யவில்லை. தொழில் நகரமான கோவைக்கு மத்திய அரசின் பெரிய தொழிற்சாலைகள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் கண்டுகொள்ளவில்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பல தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது இல்லை. அதுகுறித்து எம்.பி கவலைப்படவே இல்லை” என்றார் வருத்தத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick