பொங்கலோ பொங்கல்... ஊழலோ ஊழல்!

ரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம். அதன்  ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை, ஆறாயிரம் கோடி ரூபாய். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை கரும்பு ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.220 கோடி. நிதி நெருக்கடியால் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் நிலுவை. இப்படி தமிழக அரசின் பல்வேறு துறைகள் நிதி நெருக்கடியால் தள்ளாடுகின்றன. மாநில அரசின் வரி வருவாயில் வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவிடப்படும் தொகை, வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே.

அ.தி.மு.க-வின் கடந்த ஏழரை ஆண்டு ஆட்சிக்குப்பின் தற்போதைய கடன் சுமை, மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாய். ஆண்டுக்கு அரசு செலுத்தும் வட்டி மட்டுமே 29, 624 கோடி ரூபாய். எதற்கு இந்தப் புள்ளிவிவரங்கள் என்கிறீர்களா? இப்படியான சூழலில்தான் பொங்கல் பரிசுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு 2,250 கோடி ரூபாய்.

கடுமையான கடன் சுமைக்கு மத்தியில், இந்த ரொக்கப்பரிசு தேவையா என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “கட்சி நிதியில் இதைச் செயல்படுத்தியிருந்தால், யாரும் கேட்க மாட்டார்கள்; மக்கள் வரிப்பணத்தில் கொடுத்தால் நிச்சயம் கேள்வி எழும்’ என்று கடும் விமர்சனங்களை எழுப்பியது. மேலும், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் ‘என்’ கார்டு எனப்படும் பொருள்கள் வாங்காத அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுப்பொருள்கள் தருவதைத் தடை செய்து உத்தரவிட்டதுடன், அரசு செய்த மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே, பல லட்சம் குடும்பங்கள் பொங்கல் பரிசுப்பொருள்களை வாங்கிவிட்ட நிலையில், மீதமுள்ளோருக்கு இதைக் கொடுக்காமல் இருப்பது பாரபட்சமாக இருக்குமென்று அரசுத் தரப்பு கூறுகிறது.

Editor’s Pick