பத்து சதவிகித இடஒதுக்கீடு சரியா?

பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்சிக் காலம் விரைவில் முடிவடையும் தருவாயில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பின் கருத்துகளைக் கேட்டோம்.

ஜெயரஞ்சன், பொருளாதார நிபுணர்:

“இந்தியாவில் வறுமையை ஒழிக்க எத்தனையோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்கும் திட்டம் அல்ல. சமூகத்தில் யாருக்கு அதிகாரம் இல்லையோ, அவர்களுடைய குரல் அதிகாரத் தரப்பில் ஒலிக்க வேண்டும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்ட நடவடிக்கை இது. பணமதிப்பு நீக்கத்தின் மோசமான விளைவுகளைப் பூசிமொழுகவே, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். பி.ஜே.பி தனது வாக்குவங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே இதைச் செயல்படுத்த முனைகிறது. தற்போது மசோதாவைத் தாக்கல் செய்திருந்தாலும், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் நிராகரிக்கப்படுவது உறுதி.”

பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர்:

“இந்த மசோதாவின் நோக்கம் ஏழைகளுக்கானது என்றால், முதலில் அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். சுயநிதிப் பிரிவுகளை அகற்றுங்கள். ஓர் ஏழை மாணவர் அரசுக் கல்லூரியில் பட்டய ஆராய்ச்சிப் படிப்பு முடிக்க ஐயாயிரம் ரூபாய் போதும். ஆனால், சுயநிதிக் கல்லூரிகளில் அது சாத்தியமா? இதைச் சரிசெய்வதை விடுத்து, முற்பட்ட சமூகத்தின் ஏழைகளை மீட்க இடஒதுக்கீடு கொடுப்பது என்ன வகையிலான அளவீடு? பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனைத்து வகையிலான கல்வியையும் கற்கலாம் என்கிற உரிமையைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் மட்டுமே ஆசிரியராக இருக்கத் தகுதியானவர்களாக இருந்தார்கள். ஆனால், ஜனவரி 26, 1950 அன்று இந்த முறை ஒழிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்துக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தேவை என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த அரசியல் சாசனத்தை உறுதியான, மாற்றுக் கருத்தற்ற நடவடிக்கை (affirmative action) என்பார்கள். இன்றைக்கும் துப்புரவுத் தொழிலைக் குறிப்பிட்ட சமூக மக்கள்தான் செய்கிறார்கள். துப்புரவுத் தொழிலை குறிப்பிட்டச் சமூகம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற இயற்றப்படாத சட்டம் மாற்றப்பட்டு, சமூகத்தின் உயர் பிரிவாகக் கூறிக் கொள்பவர்களும் துப்புரவுத் தொழிலில் ஈடுபடுவார்களா?”

ராமசுப்ரமணியம், பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு ஆதரவாளர்:

“முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களில் கணிசமான பேர் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, காங்கிரஸ் ஆட்சியிலும் இப்படியான இடஒதுக்கீடுக்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது கிடப்பில் போடப்பட்டது. நான் தற்போது பொருளாதார அளவில் நல்ல நிலையில் இருக்கிறேன். ஆனால், என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த என் நண்பன் ஒருவன் கோயிலில் பூசாரியாக வறுமையில் வாடுகிறான். ஃபார்வர்டு சமூகத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கான நியாயத்தை இதுபோன்ற இடஒதுக்கீடுகளின் வழியாகத்தான் கொண்டுவர முடியும். இதுதவிர அரசியல் சட்டத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் பட்டியல் ஒன்பதிலும் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துவிட்டால் எல்லோருக்கும் சரிசமமாக எல்லாமும் போய்ச்சேரும்.

அரிபரந்தாமன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி:

காங்கிரஸ் கட்சி இதேபோல 1991-ல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை, செல்லாது என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்தது. எனவே, இதுவும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும், தேர்தலுக்காக அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு சரியானதாகப்பட வில்லை. சமூக ரீதியில் பின்தங்கியவர்களுக்கும், கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கும்  மட்டுமே அரசியலமைப்புச் சட்டப்படி இடஒதுக்கீடு செல்லும். இங்கே அனைவருக்கும் ஒரே சுடுகாடு கிடையாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது. அப்படியென்றால், இங்கே சாதி இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றட்டும்; அனைவருக்கும் சுடுகாடு ஒன்றுதான் என்று சட்டம் இயற்றட்டும்... பொருளாதாரத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

“சம அந்தஸ்துடன் உள்ளவர்களுக்கு மத்தியில் மட்டுமே சமநிலை என்பது உள்ளது. சமநிலை அற்றவர்களிடம் சமத்துவத்தைக் கொண்டுவர சமநிலை என்பது இங்கே இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவவேண்டியிருக்கிறது” - இதைச் சொன்னது வேறு யாருமல்ல... மண்டல் கமிஷனின் தலைவரான பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல்!

- ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick