மிஸ்டர் கழுகு: சின்னாபின்னமாகும் சி.பி.ஐ! - தன்னாட்சியா... தாமரை ஆட்சியா?

மார்கழி பனிக் குளிரில் இறக்கையை சிலுப்பியடி வந்த கழுகாருக்கு, சூடான இஞ்சி ‘டீ’யைக் கொடுத்துவிட்டு, ‘சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா மீண்டும் மீண்டும் பந்தாடப்படுகிறாரே?” என்றோம்.

“விரிவாகச் சொல்கிறேன் கேளும்... சி.பி.ஐ-யின் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவருக்கு இடையே எழுந்த மோதலைத் தொடர்ந்து, 2018, அக்டோபர் 23-ம் தேதி இருவரின் பதவிகளையும் பறித்து, கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. சி.பி.ஐ இணை இயக்குநராகப் பணியாற்றிய நாகேஸ்வர ராவ் தற்காலிக இயக்குநராகப் பொறுப்பேற்றார்.  அலோக் வர்மாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் சுமார் 15 பேர் அதிரடியாக மாற்றப்பட்டனர். தமிழக அமைச்சர்கள் தொடர்புடைய குட்கா வழக்கு உட்பட மிக முக்கியமான பல வழக்குகளை விசாரித்த அதிகாரிகளில் சிலரும் மாற்றப்பட்டனர்.’’

“ம்...”

‘‘தனது பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து அலோக் வர்மா தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி 8-ம் தேதி சி.பி.ஐ-யின் இயக்குநராக அவரை மீண்டும் நியமித்தது. ‘பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, புதிய சி.பி.ஐ இயக்குநரைத் தேர்வுசெய்வது பற்றி முடிவெடுக் கலாம். அதுவரை எந்தவொரு கொள்கை முடிவுகளையும் அலோக் வர்மா எடுக்கக் கூடாது’ என்று கட்டுப்பாடும் விதித்தது நீதிமன்றம். இந்தத் திருப்பங்கள், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அலேக் வர்மா மறுபடியும் அலேக்காக தூக்கியடிக்கப் பட்டுள்ளார்.”

“அவர், அந்தப் பதவியில் தொடர்ந்திருந்தால் தமிழக அரசியலில் என்ன மாற்றங்கள் வந்திருக்கும்?”

‘‘அவர் இயக்குநராக இருந்தபோது, குட்கா வழக்கை விசாரித்த டீம், இப்போது இல்லை. குட்கா வழக்கை மேற்பார்வை செய்துவந்த சி.பி.ஐ-யின் டி.ஐ.ஜி மனிஷ் குமார் சின்ஹா, நாகேஸ்வர ராவ் பதவியேற்ற அன்றே நாக்பூருக்குத் தூக்கியடிக்கப்பட்டார். குட்கா வழக்கை விசாரித்த சி.பி.ஐ எஸ்.பி-யான கண்ணன், ஆய்வாளர் பிரமோத் ஆகியோரும் மாற்றப்பட்டனர். வழக்கு சி.பி.ஐ எஸ்.பி-யான பாபு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில்தான், மீண்டும் வந்தார் அலோக் வர்மா. நடந்தவற்றையெல்லாம் ‘ரிவெஞ்ச்’சாக எடுத்துக்கொண்டு இனிமேல் அவர் பட்டையைக் கிளப்பப்போகிறார் என்று எதிர்பார்த்தார்கள் சி.பி.ஐ தரப்பில்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick